2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

துனீஷியப் பிரதமரை நீக்க நாடாளுமன்றம் வாக்களித்தது

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 31 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

துனீஷியப் பிரதமர் ஹபீப் எஸீட்டுக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை, அந்நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றிய நிலையில், எஸீட்டின் அரசாங்காம் நீக்கப்பட்டுள்ளது.

ஒன்றரை வருடங்கள் மாத்திரமே எஸீட் பதவியிலிருந்த நிலையில், நாட்டின் பொருளாதார மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகளை தீர்க்க எஸீட் தவறி விட்டதாக அவரது எதிரணியினர் தெரிவிக்கின்றனர்.

எஸீட்டை பதவியிலிருந்து அகற்றுவதற்காக, மொத்தமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 118 பேர் வாக்களித்ததோடு, மூவர் அவருக்கு ஆதரவாக வாக்களித்ததோடு, 27 பேர் சமூகமளித்திருக்கவில்லை.

மேற்படி முடிவானது, பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டதாகவே இருந்தது. ஏனெனில், குறித்த அமர்வுக்கு முன்னரே, ஆளும் கூட்டணியின் சில உறுப்பினர்கள், பிரதமர் மீதான தமது நம்பிக்கையை புதுப்பிக்கப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, குறித்த அமர்வு இடம்பெறுவதற்கு முன்னர் கருத்துத் தெரிவித்த 67 வயதான அமெரிக்காவில் பயிற்றப்பட்ட பொருளாதார நிபுணரான எஸீட், தனக்கு எதிராக வாக்களிக்கப்படும் என தனக்குத் தெரியும் என நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அரேபிய வசந்தத்தின் முதலாவது நாடான துனீஷியாவில், 2011ஆம் ஆண்டு எழுச்சியில், அப்போதைய ஜனாதிபதி ஸைன் அல்-அபிடினி பென் அலி, பதவியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர், வேலையில்லாதோர் சதவீதம் மோசமடைந்துள்ளதுடன், அங்குள்ள இளைஞர்களில் மூன்றிலொரு பங்கினர் வேலையில்லாது உள்ளனர்.

இந்நிலையில், புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை, இன்று நாடாளுமன்றம் ஆரம்பிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .