2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

துருக்கி இராணுவப் புரட்சி: 6,000 பேர் கைதாகினர்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 17 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியின் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் பதவியிலிருந்து அகற்றி, இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு, துருக்கிய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி, தோற்கடிக்கப்பட்ட நிலையில், அதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, குறைந்தது 265ஆக உயர்வடைந்துள்ளது.

துருக்கி நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில், இராணுவ விமானங்கள், தலைநகர் அங்காராவில் பறந்ததைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த இராணுவப் புரட்சிக்கான முயற்சி, நாடாளுமன்றத்திலும் ஜனாதிபதி மாளிகையிலும் குண்டு வெடிக்குமளவுக்குச் சென்றிருந்தது.

நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக இராணுவத்தினரின் அப்பிரிவு அறிவித்திருந்தது. இதனால், விடுமுறையில் காணப்பட்ட ஜனாதிபதி றிசெப் தயீப் ஏர்டோவான், அவசர அவசரமாக, இஸ்தான்புல்லுக்குத் திரும்ப வேண்டியிருந்தது. அந்த விமான நிலையத்தினூடாக அவர் வந்தடைந்த சிறிது நேரத்தில், அந்த விமான நிலையமும் கூட, புரட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டிருந்தது.

அத்தோடு, துருக்கிய இராணுவத்தின் பொது ஊழியர்களின் பிரதானியான ஹூலுசி அகர், இராணுவப் புரட்சிக்கு முயன்றோரால், பயணக் கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்தார். அவரை மீட்டவுடனேயே, இந்தப் புரட்சி முயற்சி, முடிவுக்கு வந்திருந்தது. இந்தப் புரட்சியை முறியடிப்பதற்கு, பொலிஸாரினதும் இராணுவத்தினரினதும் முயற்சியை விட, பொதுமக்களின் முயற்சியே, முக்கியமானதாக அமைந்திருந்தது. இராணுவப் புரட்சி இடம்பெறுகிறது என்ற தகவல் கிடைத்தவுடனேயே, பொதுமக்களை வீதியில் இறங்குமாறு ஜனாதிபதியும் ஆளுங்கட்சியும் அங்காராவின் மேயரும் கோரியிருந்தனர். அந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக வீதியில் இறங்கியிருந்த மக்கள், ஜனாதிபதிக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த முயற்சியில் புரட்சியில் ஈடுபட்ட 104 இராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு, 6,000 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதன்போது, 2 ஹெலிகொப்டர்களையும், அரசாங்கத்துக்கு ஆதரவான படையினர் சுட்டுக் கொன்றிருந்தனர். அரசாங்கத் தரப்பில் 41 பொலிஸாரும் இரண்டு இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருந்தனர். தவிர, பொதுமக்களில் 47 பேர் கொல்லப்பட்டனர். ஒட்டுமொத்தமாக, 265 பேர் கொல்லப்பட்டதோடு, 1,440 பேர் காயமடைந்தனர்.

ஜனநாயக நாடாக துருக்கி, 1946ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், அந்நாட்டில் இடம்பெறும் 4ஆவது இராணுவப் புரட்சி இதுவாகும். இதற்கு முன்னர் 1960, 1971, 1980ஆம் ஆண்டுகளில், ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு இராணுவத்தினரின் முயற்சி இடம்பெற்றிருந்தது. அத்தோடு, 1997ஆம் ஆண்டில் இஸ்லாமிய அரசாங்கமொன்றையும் பதவியிலிருந்து அகற்றியிருந்தது.

2003ஆம் ஆண்டு முதல் பிரதமராக 2014ஆம் ஆண்டு வரையும், 2014ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியாகவும் பதவி வகித்துவரும் ஜனாதிபதி ஏர்டோவான், நாட்டில் இராணுவத்தினரின் ஆதிக்கத்துக்கெதிராகப் பகிரங்கமான கருத்துகளை வெளியிட்டு வந்த நிலையிலேயே, இந்தப் புரட்சி இடம்பெற்றுள்ளது.

இந்தப் புரட்சியைத் தொடர்ந்து, நாட்டில் அதிகமான இராணுவத்தினரைக் கொண்ட பிரிவான மூன்றாவது இராணுவத்தின் தளபதியான ஜெனரல் ஏர்டல் ஒஸ்டேர்க், தடுத்து வைக்கப்பட்டதோடு, நாட்டிலுள்ள அரசியலமைப்பு நீதிமன்றத்தின் 17 நீதிபதிகளில் ஒருவரும், கைது செய்யப்பட்டார். தவிர, இந்தப் புரட்சி முயற்சியைத் தொடர்ந்து, நாட்டிலுள்ள 2,745 நீதிபதிகள், பதவி விலக்கப்படுவர் எனவும், நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கெதிராகக் கடுமையான தண்டனைகள், எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படுமென்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .