2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

நீதிமன்றில் ஆஜராகுமாறு அத்வானிக்கு உத்தரவு

Editorial   / 2017 மே 26 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, எல்.கே. அத்வானி உட்பட பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நீதிமன்றில் ஆஜராகுமாறு, விசேட சி.பி.ஐ நீதிமன்றம் நேற்று (25) உத்தரவிட்டது.

அத்வானி, உமா பாரதி, வினய் கட்டியார், முரளி மனோகர் ஜோஷி உட்பட 12 பேருக்கே, இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள், வெள்ளிக்கிழமையன்று பதிவுசெய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இவர்கள், தாங்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுவதைத் தவிர்ப்பதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டுமெனக் கோரி, விண்ணப்பமொன்றையும் தாக்கல் செய்துள்ளனர்.

1992ஆம் ஆண்டு இடிக்கப்பட்ட பாபர் மசூதி தொடர்பான வழக்கில், அத்வானி உள்ளிட்டோர், ரேபரலி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தனர். அலகாபாத் உயர்நீதிமன்றமும், மேன்முறையீட்டின் போது, இந்தத் தீர்ப்பை உறுதி செய்திருந்தது.

ஆனால், இவர்களின் விடுவிப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ-ஆல், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதன் தீர்ப்பு, ஏப்ரல் 19ஆம் திகதி வழங்கப்பட்டிருந்த நிலையில், இவர்கள் மீதான கூட்டுச்சதி வழக்கு மீது, விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென, அந்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பாபர் மசூதி காணப்பட்ட இடம், இராமர் பிறந்த இடமெனக் கூறும் இந்து அமைப்புகள், அவ்விடயத்தில் இராமர் கோவில் நிர்மாணிக்கப்பட வேண்டுமெனக் கோருகின்றன. இதன் ஒரு கட்டமாகவே, பாபர் மசூதி, இடிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .