2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பங்களாதேஷில் கடும் மழையால் 77 பேர் பலி

Editorial   / 2017 ஜூன் 13 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷின் தென்கிழக்குப் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக, குறைந்தது 77 பேர் கொல்லப்பட்டுள்ளனரென, அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். கொல்லப்பட்டவர்களில் அனேகமானோர், மழையின் காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியே உயிரிழந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட தொலைதூரப் பகுதிக்கு, நிவாரணப் பணியாளர்கள் தொடர்ந்து செல்லும் நிலையில், இறந்தோரின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்குமென, அதிகாரிகள் அச்சம் வெளியிட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான தொலைபேசி இணைப்புகளும் போக்குவரத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர், இந்திய எல்லைக்கு அருகாமையிலுள்ள மலைப்பாங்கான மாவட்டமான ரங்கமட்டிப் பகுதியைச் சேர்ந்தவர்களாவர். அங்கு, வீடுகளை மண் மூடியதால், குறைந்தது 48 பேர் கொல்லப்பட்டனர். சிட்டகொங் மாவட்டத்தில், 23 பேர் கொல்லப்பட்டனர். சுமார் ஒரு தசாப்தத்துக்கு முன்னர் இடம்பெற்ற மண்சரிவில், சிட்டகொங்கில் 126 பேர் கொல்லப்பட்டிருந்த நிலையில், அதை ஞாபகப்படுத்துவதாக, இந்த அழிவுகள் காணப்பட்டன.

உயிரிழந்தவர்களில் நான்கு பேர், ரங்கமட்டிப் பிரதேசத்தில், முன்னர் ஏற்பட்ட மண்சரிவைத் தொடர்ந்து, வீதிகளைச் சுத்தம் செய்வதற்கான அனுப்பப்பட்ட படையினர் என அறிவிக்கப்படுகிறது.

தலைநகர் டாக்காவிலும் துறைமுக நகரமான சிட்டகொங்கிலும், கடுமையான மழை ஏற்பட்டது. இதில் சிட்டகொங் நகரத்தில், 222 மில்லிமீற்றர் மழை பெய்ததோடு, பல மணித்தியாலங்களாக, போக்குவரத்தைக் குழப்பியிருந்தது.

“மீட்புப் பணிகள், தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. பல பகுதிகள், இன்னமும் இணைப்பில் இல்லாத நிலையில், இறந்தோரின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது” என, அனர்த்த முகாமைத்துவத் திணைக்களத்தின் பிரதானியான றியாஸ் அஹ்மட் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, அனர்த்த மீட்புப் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் எனவும் அவர் உறுதிப்படுத்தினார்.

மோரா சூறாவளியால், சில வாரங்களுக்கு முன்னர் பங்களாதேஷில் பாதிப்புகள் ஏற்பட்டிருந்த நிலையில், பருவக்காற்று மழையாலும் இனிமேல் தொடர்ச்சியான பாதிப்புகள் ஏற்படுமென அஞ்சப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .