2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பதவியைத் தக்கவைத்துக்கொள்ள பிரேஸில் தள்ளாடுகிறார் ஜனாதிபதி

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 30 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலினின் ஜனாதிபதி டில்மா றூசெப், தனது ஜனாதிபதிப் பதவியைக் காப்பாற்றுவதற்காக, கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளார். அவரது அரசாங்கத்தின் கூட்டணியிலிருந்த, பிரதான தோழமைக்கட்சி வெளியேறியதைத் தொடர்ந்தே, இந்த நிலைமையை அவர் எதிர்கொண்டுள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய கட்சியான பிரேஸிலிய ஜனநாயக இயக்கக் கட்சியே, றூசெப்பின் இடசாரிக் கட்சியான தொழிலாளர் கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளது. இந்த முடிவை எடுத்த அக்கட்சி, எதிரணியில் அமர்வதற்கும் தீர்மானித்துள்ளது.

இந்த முடிவு எடுக்கப்பட்ட கூட்டம், தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதோடு, வாக்கெடுப்பு, வெறுமனே மூன்று நிமிடங்கள் மாத்திரமே நீடித்தது. வாக்கெடுப்பின் முடிவில் தேசிய கீதம் பாடப்பட்டதோடு, 'தொழிலாளர் கட்சி வெளியே" என்ற குரல்களும் எழுப்பப்பட்டன.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளையும் ஊழல் குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து சவாலை எதிர்கொண்டுள்ள ஜனாதிபதி றூசெப், தற்போது கூட்டணியையும் இழந்துள்ள நிலையில், அவருக்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

அவருக்கெதிரான விசாரணைகளை மேற்கொண்டு, அவரைப் பதவி விலக்குவதற்கா அங்கிகாரம், கீழவையில் கிடைக்குமாயின், அவருக்கெதிரான விசாரணை, செனட்டில் இடம்பெறும். அங்கு, மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கப்பெறின், றூசெப்பின் பதவி பறிபோகும்.

கூட்டணியிலிருந்து விலகினாலும், பிரேஸிலிய ஜனநாயக இயக்கக் கட்சியைச் சேர்ந்த மைக்கல் தெமர், இன்னமும் உப ஜனாதிபதியாகப் பதவி வகிக்கின்ற நிலையில், றூசெப் பதவி விலக்கப்பட்டால், தெமரே இடைக்கால ஜனாதிபதியாகப் பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .