2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: 12 பேருக்கு நிபந்தனைப் பிணை

Editorial   / 2017 மே 31 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நேற்று (30) ஆஜரான பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 12 பேருக்கும், நிபந்தனைப் பிணை வழங்கி, லக்னோ சி.பி.ஐ விசேட நீதிமன்றம் உத்தரவிட்டது.

1992ஆம் ஆண்டு டிசெம்பர் 6ஆம் திகதி, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடத்திலிருந்த பாபர் மசூதி, ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களால் இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், அவர்களைத் தூண்டியதாக, பா.ஜ.க மூத்த தலைவர்கள்
எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்டோர் மீது, கூட்டு சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது.

எனினும், இந்த வழக்கை விசாரித்த ரேபரேலி நீதிமன்றம், அத்வானி உள்ளிட்டோரை வழக்கில் இருந்து விடுவித்தது. இதை, அலகாபாத் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை இரத்துச் செய்தது.

அத்வானி உள்ளிட்டோர் மீது, ரேபரேலி மற்றும் லக்னோவில் தொடரப்பட்ட 2 வழக்குகளையும் ஒன்றாகச் சேர்த்து, மீண்டும் விசாரிக்குமாறு, லக்னோ சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு, கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் 4 வாரத்துக்குள் விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றும் தினமும் விசாரணை நடத்தி, 2 ஆண்டுகளில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், கடந்த 20ஆம் திகதி, சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், விசாரணையை ஆரம்பித்தது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர், நேற்று (30) நேரில் ஆஜராக வேண்டும் என்று, சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, லக்னோ சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில், பா.ஜ.க மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர், ஆஜராகினர். அவர்களுடன், பா.ஜ.கவின் வினய் கட்டியார், இந்துத்துவா பிரசாரகர் சாத்வி ரிதம்பரா ஆகியோரும் ஆஜராகினர்.

இந்நிலையில், அத்வானி உள்ளிட்டோருக்கு, நிபந்தனையுடனான 50,000 ரூபாய் சரீரப்பிணை வழங்கப்பட்டது. 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .