2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பரிஸ் தாக்குதல்கள் ஆச்சரியமளிக்கவில்லை, மேலும் தாக்குதல்கள் நடக்கலாம்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 17 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஆச்சரியமளிக்கவில்லை என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஆஷ் கார்ட்டர் தெரிவித்துள்ள அதேவேளை, மேலும் தாக்குதல்கள் நடக்கலாம் என மத்திய புலனாய்வு முகவராண்மையின் (சி.ஐ.ஏ) பணிப்பாளர் ஜோன் பிரென்னன் தெரிவித்துள்ளார்.

கருத்துத் தெரிவித்த ஆஷ் கார்ட்டர், 'கடந்த சில நாட்களில் இடம்பெற்றவை எவையும் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. அது, யாருக்கும் ஆச்சரியமளிக்கக்கூடாது" எனத் தெரிவித்தார்.

'இந்த எதிரி, தோற்கடிக்கப்பட வேண்டிய எதிரி, தோற்கடிக்கப்படவுள்ள எதிரி. நாகரிகமடைந்த மக்களாக நாமிருக்கும் போது, எங்களது கொள்கைகள் அனைத்துக்கும் எதிராக நிற்கும் எதிரி" எனத் தெரிவித்தார்.

அத்தோடு, புலனாய்வினரிடமிருந்து தப்பிக்கும் இயல்பில், ஐ.எஸ்.ஐ.எஸ் முன்னேறி வருவதையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

தாக்குதல் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சி.ஐ.ஏ இன் பணிப்பாளர் ஜோன் பிரென்னன், பரிஸ் தாக்குதலை வெறுமனே தனித்த ஒன்றாகக் கருதவில்லை எனக் குறிப்பிட்டார்.

இவ்வாறான தாக்குதல்களை நடத்துவதற்கான திட்டத்தை ஐ.எஸ்.ஐ.எஸ் கொண்டிருக்கின்றது எனக் குறிப்பிட்ட அவர், இவ்வாறான தாக்குதல்கள், ஒரு சில நாட்களில் திட்டமிடப்படுவதில்லையெனவும் பல மாதத் திட்டமிடலின் பின்னரே மேற்கொள்ளப்படுகின்றன எனவும் தெரிவித்தார். அத்தோடு, அக்குழுவின் திட்டத்தில் காணப்படும் ஒரேயொரு தாக்குதலாகவும் இது இருக்காது என எண்ணுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பரிஸ் தாக்குதல்களைத் தொடர்ந்து, சிரிய அகதிகள் மீதான பார்வைகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 26 மாநிலங்கள், தங்கள் பகுதிக்குள் சிரிய அகதிகளை உள்ளெடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

அலபாமா, ஜோர்ஜியா, டெக்ஸாஸ், அரிசோனா, மிச்சிக்கன், இலியானொஸ், மெய்ன், நியூ ஹம்ப்ஷெயர் உள்ளிட்ட மாநிலங்களே இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ள 26 மாநிலங்களில் 25, குடியரசுக் கட்சியிள் ஆளுகைக்குக் கீழ் காணப்படுகின்றவை ஆகும்.

ஜனநாயகக் கட்சியின் கீழ் காணப்படுகின்ற 18 மாநிலங்களில், நியூ ஹம்ப்ஷெயர் மாத்திரம், சிரிய அகதிகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மகி ஹஸன் என்ற அதன் ஆளுநர், முழுமையான புலனாய்வு அறிக்கையின்படி, ஆபத்தில்லை என்பது வெளிப்படுத்தப்படும்வரை, சிரிய அகதிகளை உள்வாங்குவது நிறுத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X