2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பரிஸ் தாக்குதலின் முதலாவது ஆயுததாரி இனங்காணப்பட்டார்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 15 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதல்களோடு சம்பந்தப்பட்ட ஒருவர், இனங்காணப்பட்டுள்ளதாக, பிரெஞ்சுப் பொலிஸார் அறிவித்துள்ளனர். பரிஸை வசிப்பிடமாகக் கொண்ட 29 வயதான ஓமர் இஸ்மாயில் மொஸ்தெபை என்பவரே இவரென, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரான்ஸ் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இத்தாக்குதலில், குறைந்தது 129 பொதுமக்கள் உயிரிழந்ததோடு, 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். இவர்களில் குறைந்தது 99 பேராவது, கடுமையான காயங்களுடன் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ளனர். தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக, ஐ.எஸ்.ஐ.எஸ்ஆயுதக் குழு தெரிவித்திருந்தது.

இந்நிலையிலேயே, இத்தாக்குதல் தொடர்பான விவரங்களை, பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 7 பேர் இத்தாக்குதலை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர்களில் ஆறு பேர், தற்கொலை அங்கிகளை வெடிக்க வைத்து உயிரிழந்ததாகவும், மற்றையவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஐ.எஸ்.ஐ.எஸ் விடுத்துள்ள அறிக்கையின், 'எட்டு சகோதரர்கள், தற்கொலை அங்கிகளை ஏந்தித் தாக்குதல் நடத்தினர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதில், தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட 6 இடங்களில், பிரதானமான தாக்குதல் இடம்பெற்ற பட்டக்லன் இசைநிகழ்ச்சி மண்டபத்தில், குறைந்தது 89 பேரைக் கொன்ற தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவராக, ஓமர் இஸ்மாயில் இனங்காணப்பட்டுள்ளார். தற்கொலை அங்கியை வெடிக்க வைத்து அவர் உயிரிழந்த போதிலும், அவரது விரலை வைத்து அவர் அடையாளங்காணப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவரது தந்தையும் 34 வயதான சகோதரரும் தடுப்புக் காவலுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு, இஸ்மாயிலின் குடும்பத்தினரதும் நண்பர்களினதும் வீடுகளில் பொலிஸார், தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

அத்தோடு, தாக்குதலில் ஈடுபட்டவர்கள், மிகவும் பயிற்சிபெற்றவர்களாகவும் அனுபவமிக்கவர்களாகவும் காணப்பட்டார்கள் எனத் தெரிவிக்கும் பொலிஸார், அவர்கள், இதற்கு முன்பு சிரியாவுக்குப் பயணம் செய்து, ஆயுத மோதல்களில் ஈடுபட்டார்களா என்பதை ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, மற்றொரு தாக்குதலாளியின் உடலுக்கு அருகில் காணப்பட்ட கடவுச்சீட்டொன்றின்படி, அந்தக் கடவுச்சீட்டின் உரிமையாளர், கிரேக்கத்தில் பதிவுசெய்யப்பட்ட அகதியாக இருக்கக்கூடுமென்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அது குறித்து மேலதிக விசாரணைகளை நடாத்துமாறு, கிரேக்கத்தை பிரான்ஸ் கேட்டுள்ளது. அத்தோடு, இன்னொரு கைவிரல் அடையாளம் குறித்தும் கிரேக்கத்தின் உதவி பெறப்பட்டுள்ளது. இன்னொரு எகிப்தியரின் கடவுச்சீட்டுத் தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.

எந்தவொரு விடயமும் உறுதிப்படுத்தப்படாத போதிலும், சிரியாவிலிருந்து ஐரோப்பாவை நோக்கி வந்த அகதிகளோடு இணைந்து, இந்த ஆயுததாரிகளும் வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, தாக்குதல் தொடர்பாகப் புதிய தகவல்களை வெளியிட்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொஸ் ஹொலன்டே, இத்தாக்குதல்கள், வெளிநாட்டிலேயே தயாரிக்கப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டுத் திட்டமிடப்பட்டதாகவும், இதற்காக பிரான்ஸிலிருந்து உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .