2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாராட்டையும் சர்ச்சையையும் சந்தித்த மிச்செல்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 28 , மு.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் நேற்று முன்தினம் உரையாற்றிய அமெரிக்க முதற்பெண்மணி மிச்செல் ஒபாமா, தனது திறமையான, உணர்வுகளைத் தொடும் உரையின் மூலம் பாராட்டுகளைப் பென்றிருந்தார். எனினும், அவரது உரையில் ஒரு சிறிய பகுதி, ஒரு பக்கம் பாராட்டையும் மறுபக்கமாக சர்ச்சையையும் ஏற்படுத்திக் கொண்டது.

அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியின் மனைவி என்ற வகையில், தனது அனுபவங்கள் பற்றிய உரையாற்றிய மிச்செல் ஒபாமா, "அடிமைகளால் கட்டப்பட்ட வீட்டில் (வெள்ளை மாளிகை), நான் ஒவ்வொரு காலையிலும் எழுகிறேன். அத்தோடு, எனது மகள்மார் - அழகானதும் புத்திக்கூர்மையானதுமான கறுப்பினத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் இருவர் - வெள்ளை மாளிகையின் புல்வெளியில் தங்கள் நாய்களுடன் விளையாடுவதையும் நான் காண்கிறேன்" என்றார்.

அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மாளிகையான வெள்ளை மாளிகையை, அடிமைகளால் கட்டப்பட்டது என மிச்செல் ஒபாமா விளித்தமை, வலதுசாரிகளுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. வெள்ளை மாளிகை, அடிமைகளால் கட்டப்படவில்லை எனவும், ஐரோப்பியர்களாலேயே கட்டப்பட்டது எனவும் தெரிவித்த அவர்கள், அமெரிக்க வரலாற்றை மிச்செல் ஒபாமா மாற்ற முயல்வதாகவும் அமெரிக்காவை அவமானப்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டினர்.

ஆனால், வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கும் கருத்தோடு, எதிர்மாறாக உள்ளது.  வெள்ளை மாளிகையை நிர்மாணித்தவர்களில், அடிமைகள் முக்கிய பங்கை வகித்துள்ளனர். அடிமைப்படுத்தப்படாத வெள்ளையினத்தவரும் கறுப்பினத்தவரும் அதில் பங்கு வகித்த போதிலும், அடிமைகளில் பங்கு கணிசமானது எனத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, மிச்செல் ஒபாமாவின் கருத்து, சரியானது எனத் தெரிவிக்கின்றனர்.

முதற்பெண்மணியின் கருத்தை வரவேற்றுள்ள ஜனநாயகக் கட்சியினர், அந்த உண்மையைப் பகிரங்கமாக அறிவித்தமையை வரவேற்றுள்ளனர். அத்தோடு, இவ்வாறான உண்மையைப் பகிரங்கமாக அறிவித்த முதலாவது முதற்பெண்மணியாக மிச்செல் ஒபாமாவே இருக்க வேண்டுமென அவர்கள் புகழாரம் சூட்டுகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .