2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பிரான்ஸ் பாதிரியாரைக் கொன்றவர் கண்காணிப்பில் இருந்தார்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 27 , பி.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டிருந்த ஜிஹாதி ஒருவர், சிறிய நகரத்திலுள்ள தேவாலயமொன்றில் பட்டப்பகலிலே எவ்வாறு பாதிரியார் ஒருவரை கொன்றார் என பிரான்ஸ் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

வடக்கு நகரான சட்டி தென் யூ கூஃபையில் உள்ள தேவாலயமொன்றின் காலைத் திருப்பலியின்போது, தேவாலயத்துக்குள் நுழைந்த தாக்குதலாளிகளில் ஒருவரான அடெல் கெர்மிஷே, 86 வயதான பாதிரியாரின் கழுத்தை அறுத்ததுடன், வழிபடச் சென்ற ஒருவரை, பலத்த காயங்களுக்கு உள்ளாக்கியிருந்தார். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் உரிமை கோரியிருந்தது.

நீஸில் லொறியை ஏற்றி, 84 பேரைக் கொன்ற தாக்குதல் இடம்பெற்று, இரண்டு வாரங்களுக்குள்ளேயே, மேற்படி புதிய தாக்குதல் இடம்பெற்றுள்ள நிலையில், பாதுகாப்பு குறைபாடுகள் என்று கூறப்படுபவை தொடர்பாக ஏற்கெனவே அரசியல் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், தேவாலயம் மீதான இத்தாக்குதல், மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கெர்மிஷேயை காணவில்லை என்று அவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் உஷார் படுத்தியமையையடுத்து கெர்மிஷே முதன்முறையாக, பயங்கரவாதத்துக்கெதிரான அதிகாரிகளின் கவனத்தில் வந்ததாக தெரிவித்த அரச வழக்குத் தொடருநர் பொஸ்வா மொலின்ஸ், தனது சகோதரரின் அடையாளத்தைப் பயன்படுத்தி, சிரியா செல்ல முயன்றபோது அவரை ஜேர்மனிய அதிகாரிகள் கைது செய்ததாகவும் மேலும் தொடர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து, சட்ட கண்காணிப்பின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டதாகவும், ஆனால் மே மாதம் துருக்கிக்குச் சென்ற நிலையில், அங்கு கைது செய்யப்பட்டு பிரான்ஸூக்கு அனுப்பப்பட்டதாவும், இவ்வருடம் மார்ச் வரை தடுப்பில் வைக்கப்பட்டு, இலத்திரனியல் கை வளையத்துடன், காலை எட்டு மணியிலிருந்து நள்ளிரவு 12.30 வரை வீட்டிலிருந்து வெளியேறலாம் என அனுமதிக்கப்பட்டிருந்ததாக மொலின்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பயங்கரவாதத்துக்கெதிரான சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் மேலும் அதிகரித்துள்ள நிலையில், தங்களது சுதந்திரத்தை முடக்குவது, பயங்கரவாதத்கெதிரான போரை மேலும் செயல்திறன் மிக்கது ஆக்காது என பிரான்ஸ் ஜனாதிபதி பொஸ்வா ஹொலாந்தே தெரிவித்துள்ளார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X