2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முதலமைச்சர் நாராயணசாமி குறித்து பிரதமரிடம் கிரண் பேடி முறைப்பாடு

Editorial   / 2017 ஜூன் 13 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுச்சேரியின் முதலமைச்சர் நாரயணசாமிக்கும் தனக்கும் இடையில், சமீபகாலமாக ஏற்பட்டு  வரும் மோதல் குறித்து, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, ஆளுநர் கிரண் பேடி விளக்கம் அளித்துள்ளதாகவும் முதலமைச்சர் பற்றி புகாரளித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.  

புதுவை, ஒன்றியப் பிரதேசம் என்பதால், தனக்கே அதிகாரம் என்று கூறி, கவர்னர் கிரண் பேடி, அன்றாட அரச பணிகளில் தலையீடு செய்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.  

இதனால், ஆளுநர் கிரண் பேடிக்கும் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர், கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த மோதலால், அரச பணிகள் பாதிக்கப்படுவதாக, இரு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், முதலமைச்சர் நாராயணசாமி, சரக்கு சேவை வரி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, புதுடெல்லிச் சென்றிருந்தார். 

இதன்போது, நேற்றுமுன்தினம் (11) அவர், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இருவரிடமும், ஆளுநர் செயல்பாடு குறித்து புகார் தெரிவித்து இருப்பதாக, நாராயணசாமி கூறினார். மேலும், அவர் ஏற்கெனவே பிரதமரிடம் ஆளுநர் குறித்து புகார் கூறியிருப்பதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில், ஆளுநர் கிரண் பேடி, புனேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு, புதுடெல்லிக்கு, சென்றபோது, நேற்று (12) காலை, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது முதலமைச்சருக்கும் தனக்கும் உள்ள மோதல் குறித்து பிரதமரிடம் விளக்கம் அளித்ததுடன், முதலமைச்சர் பற்றி பல்வேறு புகார்களைத் தெரிவித்ததாகத் தெரிகிறது. 

ஆனால், என்ன தகவல்களைப் பிரதமரிடம் கூறினார், என்ற விவரங்கள் எதையும் வெளியிடவில்லை. அடுத்ததாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் சிலரையும் சந்திக்க, ஆளுநர் கிரண் பேடி முடிவு செய்துள்ளார். அவர்களிடமும் நாராயணசாமி பற்றியும், அமைச்சரவை பற்றியும் புகார்களை கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முதலமைச்சர், ஆளுநர் அடுத்தடுத்து டெல்லியில் சென்று புகார் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .