2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மன்செஸ்டர் தாக்குதல்: தாக்குதலாளியின் வலையமைப்பைப் பொலிஸார் தேடுகின்றனர்

Editorial   / 2017 மே 25 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத்திலும் லிபியாவிலும், நேற்று  (24) கைதுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மன்செஸ்டர் அரங்கில், தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட தாக்குதலாளியைச் சூழவுள்ள வலையமைப்பைக் கண்டுபிடிப்பதற்கு, பொலிஸார் போராடி வருகின்றனர்.   

இந்நிலையில், தாக்குதல் தொடர்பான விசாரணையின் தகவல்கள், ஐக்கிய அமெரிக்க ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டுள்ளமை, ஐக்கிய இராச்சியத்தைக் கோபத்துக்கு  உள்ளாக்கியுள்ளது.   

நியுயோர்க் டைம்ஸால் பிரசுரிக்கப்பட்ட புகைப்படங்கள், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட குண்டானது, நுட்பமானமென்பதுடன், சக்திவாய்ந்ததென்பதை வெளிக்காட்டியுள்ளது.

தாக்குதலாளியின் இடது கையில் இருந்தது என நம்பப்படும் ஆளியின் மூலம் குண்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது. குண்டு வெடிக்கச் செய்யப்படுவதற்கு, 12 வோல்ட் மின்கலமொன்று பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. இது தவிர, குண்டு வெடித்துச் சிதறும்போது, அதற்குள்ளிருக்கும் போல்ட்டுகள், அதிக வேகத்தில், சூழவுள்ளவர்களைத் தாக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.   

இந்நிலையிலேயே, குண்டைத் தயாரிப்பதற்கு, தாக்குதலை மேற்கொண்ட சல்மான் அபேடி, உதவியைக் கொண்டிருந்திருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.   

இதேவேளை, ஐந்து ஆண்களையும் பெண்ணொருவரையும், மன்செஸ்டர் பொலிஸார், நேற்று  கைது செய்துள்ள நிலையில், விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆகியுள்ளது. கைதுகள் தவிர, வடக்கு, மத்திய இங்கிலாந்தின் பல்வேறுபட்ட முகவரிகளில், தேடுதல்களை, பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.   

இந்நிலையில், பாதுகாப்புச் சேவை தகவல் மூலங்களை மேற்கோள்காட்டிய இன்டிபென்டென்டன்ட் பத்திரிகை, ஓரிடத்தில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியிட்டுள்ளது.   

இதேவேளை, லிபிய தலைநகர் திரிபோலியிலுள்ள பொலிஸார், அபேடியின் இளைய சகோதரரையும் அவரது தந்தையையும், நேற்று  கைது செய்துள்ளனர். அபேடியின் இளைய சகோதரரான ஹஷேம் அபேடி, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாக, பயங்கரவாதத்துக்கெதிரான உள்ளூர் படையின் பேச்சாளர்களிலொருவர் தெரிவித்துள்ளார். இது தவிர, திரிபோலியில், தாக்குதலொன்றை நடத்தத் திட்டமிட்டதாகவும், ஹஷேம் அபேடி சந்தேகிக்கப்பட்டுள்ளார்.   

இந்நிலையில், ஐக்கிய இராச்சியத்தில், நேற்று முன்தினம் (23) மேற்கொள்ளப்பட்ட முதலாவது கைது, அபேடியின் மூத்த சகோதரர் என, ஐக்கிய இராச்சிய, ஐக்கிய அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.   

இதேவேளை, அபேடி, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும், சிரியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கலாம் எனவும், பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் ஜெஹா கொலொம்ப் தெரிவித்துள்ளார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .