2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மன்சூர் மீதான தாக்குதலையடுத்து புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கிறது தலிபான்

Shanmugan Murugavel   / 2016 மே 23 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் தலிபான் குழுவின் தலைவரான முல்லா அக்தர் மன்சூர் மீது, அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக, அக்குழுவின் தலைமைத்துவச் சபை, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்றுகூடிக் கலந்துரையாடியுள்ளததாக அறிவிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில், பாகிஸ்தானியப் பக்கமாக மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல்களில், மன்சூர் உயிரிழந்திருக்கலாம் என பென்டகன் வட்டாரங்கள் தெரிவித்ததோடு, அவர் உயிரிழந்துவிட்டார் என ஆப்கானிஸ்தானின் புலனாய்வு வட்டாரங்களும் தலிபான்களின் ஒரு பிரிவினரும் தெரிவித்திருந்தனர்.

ஆனால், தலிபான்களிடமிருந்து இதுவரை உத்தியோகபூர்வமான அறிவிப்பேதும் வெளியாகியிருக்கவில்லை.
இந்நிலையிலேயே, அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக அக்குழு ஒன்றுகூடியமையென்பது, மன்சூரின் மரணத்தை ஏற்றுக் கொள்வதாகவே கருதப்படுகிறது.

இதற்கு முன்னர் இருந்த தலைவரான முல்லா ஓமரின் மரணத்தைத் தொடர்ந்து மன்சூர் நியமிக்கப்பட்ட போது, தலிபான்களிடையே பிளவு ஏற்பட்டிருந்தது. மன்சூரின் தலைமைத்துவத்தை எதிர்த்த ஒரு பிரிவினர், தனியாகச் சென்றிருந்தனர். இந்நிலையிலேயே, மன்சூரின் மரணம், அக்குழுவை மேலும் பிளவுபடுத்தக்கூடிய நிலைமையை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது.

எனினும், இந்தச் சந்திப்பின் போது, அடுத்த தலைவராகத் தெரிவாகுவதற்கான வாய்ப்புக் கொண்டோரில், கொரில்லா கொமாண்டரான சிராஜுடின் ஹக்கானியின் பெயரும் கலந்துரையாடப்பட்டுள்ளது. அவரது தலைக்கு, அமெரிக்காவால் 5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ளதோடு, தலிபான்களுள் காணப்படும் மிக மோசமானவராக இவர் கருதப்படுகிறார். இவ்வாறு இவர் தெரிவானால், தலிபான்களால் தாக்குதல்கள் அதிகரிக்கப்படுமெனவும் அவை மோசமானவையாக அமையுமெனவும் கருதப்படுகிறது.

ஹக்கானி தவிர, தலிபான்களின் ஸ்தாபகத் தலைவரான முல்லா ஓமரின் மகனான முல்லா மொஹமட் யாகூப்பின் பெயரும் கலந்துரையாடப்பட்டுள்ளது. அவ்வாறு அவர் நியமிக்கப்பட்டால், தலிபான்களை ஒற்றுமைப்படுத்தும் தன்மை அவருக்குக் காணப்படுமெனக் கருதப்படுகிறது.

இவர்களைத் தவிர, குவான்டனாமோவின் முன்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த முல்லா அப்துல் கயூம் ஸாகீர் மற்றும் முல்லா ஷெரின் ஆகியோரின் பெயர்களும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X