2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மோதலின்றிப் பின்வாங்குகின்றன ஆப்கான் துருப்புகள்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 06 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் வன்முறை மிகுந்த தென்பகுதி மாவட்டங்களிலிருந்து, ஆப்கானிஸ்தானின் அரச துருப்புகள், மோதல் எவையுமின்றிப் பின்வாங்குகின்றன. இதன்மூலம், முக்கியமான பிராந்தியங்களை, தலிபான்களிடம் அரச துருப்புகள் கையளித்துள்ளன.

இந்தப் பின்வாங்கலை, தந்திரோபாயப் பின்வாங்கலென அரசாங்கத் தரப்புகள் தெரிவித்தாலும், அரச படைகள் கைப்பற்றிய இடங்களின் கட்டுப்பாடு, அப்படைகளிலிருந்து விலகிச் செல்வதாகவே இது கருதப்படுகிறது.

அதிகளவிலான உயிரிழப்புகள், தனித்து விடப்பட்டமை, துருப்புகளின் எண்ணிக்கை போதாமை ஆகியவற்றின் காரணமாக, உருஸ்கன் மாகாணத்தின் மத்திய பகுதியிலிருந்து, அரச துருப்புகள் பின்வாங்கியுள்ளன. இதன்மூலம், கடந்த மாதம் ஆரம்பித்த பின்வாங்கல்கள், மேலும் தொடர்கின்றன. அப்படைகள் ஏற்கெனவே, ஹெல்மன்ட் மாகாணத்தின் முசா கலா, நொவ்ஸட் மாவட்டங்களிலிருந்து பின்வாங்கியுள்ளன.

இந்தப் பின்வாங்கல்களுக்கு, தலிபான்களுடன் அரசாங்கம் மேற்கொண்ட ஒளிவுமறைவான ஒப்பந்தங்களே காரணமெனச் சந்தேகங்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

'துருப்புகளைப் பின்வாங்கி, கடினப்பட்டு வென்ற வெற்றியைச் சரணடைய வைக்கும் போது, தலிபான்கள் வென்றுவிட்டனர் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்" என, முசா கலாவின் பழங்குடித் தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார். அத்தோடு, 15 ஆண்டுகளுக்கும் மேலாக, இப்பிராந்தியத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயலும் அனைவர் மீதும் மேற்கொள்ளப்பட்ட துரோகமே இதுவென அவர் தெரிவித்தார்.

எனினும், தங்களது நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ள பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தவ்லட் வஸிரி, இந்தத் திட்டத்தை விமர்சிப்பவர்கள், போர் தொடர்பில் தெரியாதவர்கள் எனத் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .