2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

யுத்தநிறுத்தத்திலும் சிரியாவில் ஒரு வாரத்தில் 135 பேர் பலி

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 06 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவில், அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து கொண்டுவந்த மோதல் தவிர்ப்பில், போராளிக் குழுக்களும் சிரிய அரசாங்கமும் இணைந்துள்ள போதிலும், அது அமுலுக்கு வந்து முதல் வாரத்தில், ஆகக்குறைந்தது 135 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, மோதல் தவிர்ப்புத் தொடர்பில் சிரியாவில் காணப்படும் முரண்பாடான சூழலை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

மோதல் தவிர்ப்பு இணக்கத்தில் காணப்படும் இடங்களிலேயே, 135 இவ்வாறு கொல்லப்பட்டதாக, மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்தது. மேலதிகமாமக, மோதல் தவிர்ப்பு நடைமுறைக்கு வராத பகுதிகளில், குறைந்தது 552 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

சிரிய விடயம் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையால் ஆதரவளிக்கப்படும் பேச்சுவார்த்தைகள், இவ்வார மத்தியில் மீண்டும் ஆரம்பிக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அது எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்ற சந்தேகத்தையும், இந்த உயிரிழப்புகள் எடுத்துக் காட்டியுள்ளன.

சிரியாவின் எதிரணிகள், இந்த மோதல் தவிர்ப்பு முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை எனத் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டிவருவதோடு, புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள பேச்சுவார்த்தைகளில் பங்கு கொள்ளுமா என்பது தொடர்பில் கருத்தெதனையும் இதுவரை வெளியிட்டிருக்கவில்லை.

சிரிய அரச படைகள், ரஷ்யாவின் உதவியுடன் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், மோதல் தவிர்ப்புக் காலத்தில் இராணுவ ரீதியாக முன்னேறி வருவதாகவும், எதிரணிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இதேவேளை, கருத்துத் தெரிவித்துள்ள சவூதி அரேபிய வெளிநாட்டமைச்சர் அடெல் அல்-ஜுபைர், சிரியக் குழப்பங்கள் தீருவதற்கு, சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட், அப்பதவியிலிருந்து மிகக்கூடிய விரைவில் நீக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளது. அசாட்டைப் பதவி விலக்குவது குறித்து அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பான்மையான நாடுகளும் இணக்கத்தைக் கொண்டிருக்கின்ற போதிலும், எப்போது பதவி விலக வேண்டுமென்பதில் தொடர்ந்தும் குழப்பம் காணப்படுகிறது. அத்தோடு ரஷ்யா, தொடர்ந்தும் அசாட்டுக்கான ஆதரவை வெளிப்படுத்தி வருகிறது. எனவே, இந்நாடுகளுக்கிடையிலான ஒற்றுமை ஏற்படும் வரை, உயிரிழப்புகளைக் குறைப்பததென்பது சவாலாகவே அமையுமெனக் கருதப்படுகிறது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .