2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஹிலாரியைப் புகழ்கிறார் மிச்செல்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 26 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்காவின் முதற்பெண்மணி மிச்செல் ஒபாமா, நம்பிக்கையூட்டும் விதமாக உரையாற்றினார். ஹிலாரியைப் பற்றி உயர்வாக உரையாற்றிய அவர், ஹிலாரியின் காரணமாக, அமெரிக்காவின் ஜனாதிபதியாக பெண்ணொருவர் வரமுடியுமென, தனது மகள்களும் அனைவரின் மகன்களும் எண்ணுவதாகத் தெரிவித்தார்.

2008ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக பராக் ஒபாமா தெரிவுசெய்யப்பட்ட போது, சிறுமிகளாக இருந்த சஷாவும் மாலியாவும், தற்போது வளர்ந்த பெண்களாக மாறிவிட்டனரெனத் தெரிவித்த மிச்செல் ஒபாமா, அந்த அனுபவத்தைப் பகிரும்போது, டொனால்ட் ட்ரம்ப்புக்கெதிராக மறைமுகமான கருத்துகளை முன்வைத்தார்.

ஜனாதிபதி பராக் ஒபாமா, உண்மையில் ஓர் அமெரிக்கர் இல்லையெனவும் அவர் அமெரிக்கர் இல்லையெனவும், நீண்டகாலமாகவே டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்து வருவதோடு, பழைமைவாதக் கட்சியினரில் குறித்த பிரிவினர், ஒபாமா ஒரு கிறிஸ்தவர் அல்லர் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உரையாற்றிய மிச்செல் ஒபாமா, "அவர்களது (மகள்களது) தந்தையின் குடியுரிமையை அல்லது மத நம்பிக்கையைப் பற்றிக் கேள்விகளை எழுப்புவோரைக் கணக்கிலெடுக்க வேண்டாமென அவர்களுக்குச் சொல்கிறோம்" எனத் தெரிவித்தார்.

2008ஆம் ஆண்டில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகுவதற்கு ஒபாமாவும் ஹிலாரியும் மோதியிருந்த நிலையில், ஹிலாரியின் அணியோடு, சிறந்த உறவை, மிச்செல் ஒபாமா பேணியிருக்கவில்லை. ஆனால், அந்தத் தோல்வியின் பின்னர், அதை அவர் எடுத்துக் கொண்ட விதத்தையும், ஒபாமாவின் கீழ், இராஜாங்கச் செயலாளராக அவர் பணியாற்றியமையையும், அவர் சுட்டிக்காட்டினார். "ஹிலாரி, தனது பைகளைக் கட்டிக் கொண்டு வீட்டுக்குச் சென்றிருக்கவில்லை. ஏனெனில், உண்மையான பொதுமக்கள் சேவையாளராக, அவரது தனிப்பட்ட விருப்பங்கள், ஏமாற்றங்களைத் தாண்டி, ஏராளமான விடயங்கள் உண்டு என்பதை ஹிலாரி அறிவார்" என அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .