2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சூடான் இரண்டாக உடையுமா? இன்று வாக்கெடுப்பு

A.P.Mathan   / 2011 ஜனவரி 08 , பி.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆபிரிக்க கண்டத்தின் மிகப்பெரிய நாடான சூடானிலிருந்து தென் சூடான் பிராந்தியம் பிரிந்து தனி நாடாகுவதா என்பது குறித்து தீர்மானிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை தென்சூடானில் நடைபெறவுள்ளது.

2005 ஆம் ஆண்டு, சூடான் அரசாங்கத்திற்கும் தென் சூடானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பான சூடான் மக்கள் விடுதலை இயக்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தமொன்றுக்கிணங்க இன்று தென் சூடானில் அபிப்பிராய வாக்கெடுப்பு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சூடானின் வடக்கில் அரபு முஸ்லிம்களும் தெற்கில் கறுப்பின கிறிஸ்தவர்களும் பெரும்பான்மையினராக உள்ளனர்.

தென்சூடானில் பிரிவினைக்கான போராட்டம் ஆரம்பமாகியதையடுத்து இரு தரப்பிற்கும் இடையில் 1983 முதல் 2005 ஆம் ஆண்டுவரை கடுமையான யுத்தம் இடம்பெற்றது. இந்த யுத்தத்தில் சுமார் 20 லட்சம் பேர் பலியானதாக மதிப்பிடப்;பட்டுள்ளது.

இந்நிலையிலேயே 2005 ஆம் ஆண்டு இரு தரப்பிற்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

5 வருடங்களின் பின்னர் தென் சூடான் தனியாக பிரிந்து செல்ல வேண்டுமா என்பது குறித்து தென் சூடானில் அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்துவதற்கு இரு தரப்பினரும் இந்த ஒப்பந்தத்தில் இணங்கியிருந்தனர். அதன்படியே இன்று அபிப்பிராய வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

சுமார் 40 லட்சம் பேர் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

 தென்சூடான் தனியாக பிரிந்து சென்றால் அது ஸ்திரமானதாக இருக்காது என சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் நேற்றுமுன்தினம் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் தென் சூடான் வாக்காளர்களில் பெரும்பாலானோர் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களிப்பர் எனவும் இதனால் உலகில் புதியதொரு நாடு உருவாகும் எனவும் கருதப்படுகிறது.

இவ்வாக்களிப்பு அமைதியாக நடைபெற வேண்டுமென பல நாடுகள் கோரியுள்ளன. எனினும் நேற்று தென்சூடானில் இடம்பெற்ற வன்முறைகளில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .