2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பர்மா கலவரத்தில் மேலும் இருவர் பலி

A.P.Mathan   / 2014 ஜூலை 03 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பர்மாவில் இரண்டாவது நாளாக நீடிக்கும் மதக்கலவர வன்முறையில் நேற்றிரவு இரண்டு ஆண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
 
பர்மாவின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயில் முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையிலான வன்முறைகளில் இந்த இரு உயிர்பலிகள் நடந்திருக்கின்றன.
 
நகரில் சுற்றித்திரிந்த புத்த மத குழுக்கள் - கடைகள், வாகனங்கள் மற்றும் மசூதிகளை அடித்து நொறுக்கியதை தடுக்க, நூற்றுக்கணக்கான காவலர்கள் நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 
பௌத்த மதத்தைச் சேர்ந்த ஓர் ஆணை, முஸ்லிம் ஆண்களின் கும்பல் ஒன்று கத்தியால் வெட்டிச் சாய்த்ததாகவும், அதற்கு சில மணிநேரம் கழித்து காலைத் தொழுகைக்கு சென்றுகொண்டிருந்த முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்டார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நகரின் தற்போதைய மதக்கலவர வன்முறைகள் புதன்கிழமை இரவு தொடங்கின. இரண்டு முஸ்லிம் ஆண்கள் ஒரு புத்த மதத்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த வதந்தியைத் தொடர்ந்து இந்த வன்முறைகள் ஆரம்பித்தன. முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளும், ஒரு மசூதியும் பௌத்தர்களால் தாக்கி சேதப்படுத்தப்பட்டன.
 
சுமார் 500க்கும் மேற்பட்ட பௌத்தர்கள், மூங்கில் கட்டைகள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் தாக்க முயன்றதை பொலிஸார் தடுத்தனர். முஸ்லிம் ஒருவர் சுடப்பட்டார் என்றும், மூன்று பௌத்தர்கள் காயமடைந்தனர் என்றும் உள்ளூர் செய்தி கூறுகின்றன.
 
பர்மாவின் மேற்குப் புற மாகாணமான ரக்கைன் மாகாணத்தில், கடந்த மூன்றாண்டுகளாகவே பெரும்பான்மை பௌத்தர்களுக்கும் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்துக்கும் இடையே மதரீதியான வன்செயல்கள் நடந்து வந்திருக்கின்றன.
 
இந்த மோதல்களில் 2012ஆம் ஆண்டில் மட்டும், ரக்கைன் மாகாணத்தில் குறைந்தது 200 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். (பிபிசி)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .