2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அமெரிக்க இராணுவத்தின் 4 லட்சம் இரகசிய ஆவணங்கள் அம்பலம்

Super User   / 2010 ஒக்டோபர் 24 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க இராணுவத்தின் 400,000 இரகசிய ஆவணங்கள் விக்கி லீக்ஸ் எனும் இணையத்தளம் வெளியிட்டுள்ளமை சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக்கில் பொதுமக்களை ஈராக்கிய அதிகாரிகள் துன்புறுத்தியமைக்கான சாட்சியங்களை அமெரிக்க படையினர் உதாசீனப்படுத்தியதாக மேற்படி ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

2003 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அமெரிக்கப் படையெடுப்பின் பின்னர் ஈராக்கிலுள்ள அமெரிக்க சோதனைச் சாவடிகளில்  வைத்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்க வரலாற்றில் இவ்வளவு பெரும் எண்ணிக்கையான இரகசிய ஆவணங்கள் வெளிவந்தமை இதுவே முதல் தடவையாகும்.

விக்கிலீக்ஸ் அமைப்பானது அரசாங்கங்களின் இரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஓர் சர்வதேச அமைப்பாகும். அவுஸ்திரேலியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளரும் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான ஜுலியன் அசான்ஜ் (வயது 39) என்பவர் இவ்வமைப்பை ஆரம்பித்தார். 2006 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அதன் இணையத்தளம் மூலம் இதுவரை 12 மில்லியன் ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஈராக் போர் தொடர்பான லட்சக்கணக்கான ஆவணங்களை தற்போது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

மேற்படி ஆவணங்கள் ஈராக்கில் கொல்லப்பட்ட பொதுமக்களது விபரங்களை அமெரிக்கப் படையினர் பதவி செய்துவந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

இதன்படி ஈராக்கில் அமெரிக்க படைநடவடிக்கையின் பின் 109,000 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களில் 66,081 பேர் பொதுமக்கள் எனவும் அவ்வறிக்கைகளில்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரித்தானியப் படையினர் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியொருத்தியை சுட்டுக்கொன்றதாகவும் மேற்படி ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டமையை  கண்டித்துள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்பு திணைக்களத்தின் பேச்சாளர் அந்த அறிக்கையை வெறும் அவதானிப்பு அடிப்படையிலானவை எனக் கூறி நிராகரித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .