2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘இம்ரான் கானுக்குச் சார்பாகச் செயற்படவில்லை’

Editorial   / 2018 ஜூலை 12 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்மாதம் 25ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தல், நீதியாகவும் சுதந்திரமாகவும் இடம்பெறுவதை உறுதிப்படுத்த, சுமார் 371,000 படையினரை சேவையில் ஈடுபடுத்தப் போவதாகத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் இராணுவம், அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கானுக்குச் சார்பாகச் செயற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அந்நாட்டின் தேர்தல் கட்டமைப்பில் தலையிடுவதற்கு, பாகிஸ்தான் இராணுவம் முயல்கிறது என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஈ-இன்சாப் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு இராணுவம் முயல்கிறது எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஊழலுக்கு எதிரானவராகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ள இம்ரான் கான், பாதுகாப்பு விவகாரங்களில், பழைமைவாதக் கொள்கைகளைக் கொண்டவராவார். அவரது இந்நிலைப்பாடு, சுதந்திர பாகிஸ்தானின் காலத்தின் கிட்டத்தட்ட பாதியளவு காலத்தை ஆட்சிசெய்த இராணுவத்தினருக்கு சார்பானது எனக் கருதப்படுகின்ற போதிலும், இராணுவத்தினருடன் இணைந்து செயற்படவில்லை என, கான் மறுக்கிறார்.

இந்நிலையில், தேர்தல் கடமைகளில் உதவுமாறு, தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளதாகவும், அதனாலேயே இராணுவத்தின் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும், இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் அரசியலில் இராணுவத்தின் பங்களிப்பு, அந்நாட்டின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப், அவரது பதவியிலிருந்து கடந்தாண்டு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் அதிக கவனத்தை ஈர்த்திருந்தது. பதவியிலிருந்து நீக்குவதற்கான உத்தரவை, உச்சநீதிமன்றமே விடுத்திருந்தாலும், அதன் பின்னணியில் இராணுவம் காணப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அதன் பின்னர், நவாஸ் ஷெரீபுக்கும் அவரது மகளுக்கும், சிறைத்தண்டனை அண்மையில் விதிக்கப்பட்ட போதும் கூட, இராணுவத்தின் செல்வாக்கு அதில் காணப்பட்டது எனக் குற்றஞ்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X