2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘ஐ. அமெரிக்கப் படைகள் வெளியேறுவது சில வாரங்களில் ஆரம்பமாகும்’

Editorial   / 2019 பெப்ரவரி 11 , பி.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் உத்தரவிடப்பட்ட, சிரியாவிலிருந்து தரைப் படைகளை வெளியேற்றுவதை சில வாரங்களில் ஐக்கிய அமெரிக்கா ஆரம்பிக்குமென ஐக்கிய அமெரிக்க மத்திய கட்டளையின் தலைவரான ஜெனரல் ஜோசெப் வொடெல் நேற்றுத்  தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறிப்பாக எப்போது சிரியாவிலிருந்து வெளியேறுவதென்பது அங்குள்ள நிலைமையைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுமென மத்திய கிழக்கிலுள்ள ஐக்கிய அமெரிக்கப் படைகளை மேற்பார்வையிடுபவராக ஜோசெப் வொடெல் கூறியுள்ளார். ஈராக்கிய எல்லைக்கருகே, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கெதிராக இறுதி மோதலை ஐக்கிய அமெரிக்கா ஆதரவளிக்கும் போராளிகள் சிரியாவில் ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிரியாவிலிருந்து தளவாடங்களை வெளியேற்றுவதை ஏற்கெனவே ஐக்கிய அமெரிக்க இராணுவம் ஆரம்பித்துள்ள நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் 2,000க்கு மேற்பட்ட படைகளின் வெளியேறல் சில நாட்களிலா அல்லது வாரங்களிலா என வினவப்பட்டபோதே, சில வாரங்களில் நிகழலாம் எனத் தெரிவித்த ஜோசெப் வொடெல், எவ்வாறாயினும் அனைத்தும் தரையிலுள்ள நிலைமையிலேயே தங்கியுள்ளது எனக் கூறியுள்ளார்.

சிரியாவிலிருந்து ஐக்கிய அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவதாக கடந்தாண்டு டிசெம்பரில் ட்ரம்ப் அறிவித்ததுடன், அதைத் தொடர்ந்து அவரின் பாதுகாப்புச் செயலாளர் ஜிம் மட்டிஸ் இராஜினாமாச் செய்திருந்தார். அந்தவகையில், வெளியேறும் திட்டத்தைக் கட்டமைக்க ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள் தடுமாறியிருந்த நிலையில், வெளியேறுவதற்கு உதவுவதற்கான நூற்றுக்கணக்கான மேலதிக படைகள் சிரியாவுக்கு அனுப்பபட்டிருந்தன.

சிரியாவிலிருந்து முழுமையாக வெளியேறுவதற்கு அடுத்த மாதம் அல்லது இவ்வாண்டு ஏப்ரல் வரை எடுக்கும் என ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள் நீண்ட காலத்துக்கு முன்னரே மதிப்பிட்டிருந்தபோதும் சமர்க்களங்களை எதிர்வுகூறுவது கடினமென்ற நிலையில் குறிப்பிட்ட நேர அட்டவணையை நிர்ணயிக்கத் தவறியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .