2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஒபெக்கிலிருந்து விலகுகிறது கட்டார்

Editorial   / 2018 டிசெம்பர் 04 , மு.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெற்றோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பிலிருந்து (ஒபெக்) விலகுவதாக, கட்டார் நேற்று (03) அறிவித்தது. இதன்படி, அடுத்தாண்டு (2019) ஜனவரியிலிருந்து, இம்முடிவு அமுலுக்கு வரவுள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை, கட்டாரின் சக்தி அமைச்சர் சாட் அல்-காபி விடுத்தார். எண்ணெய் உற்பத்தியில், கட்டார் தொடர்ந்தும் ஈடுபடுமெனத் தெரிவித்த அவர், எனினும், பெற்றோலிய வாயு உற்பத்தியில் அதிக கவனத்தைச் செலுத்தப் போவதாகத் தெரிவித்தார்.

எண்ணெயில் தமக்குப் பாரிய எதிர்காலம் இல்லை எனத் தெரிவித்த அவர், யதார்த்தபூர்வமாக இருக்க வேண்டியுள்ளதெனவும், தமது எதிர்காலம், பெற்றோலிய வாயுவிலேயே தங்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.

எண்ணெய் ஏற்றுமதியின் அடிப்படையில், உலகில் 12ஆவது மிகப்பெரிய நாடாக, கட்டார் உள்ளது. மறுபக்கமாக, பெற்றோலிய வாயு ஏற்றுமதியில், முதல்நிலையில் கட்டார் உள்ளது. உலகில் ஏற்றுமதி செய்யப்படும் பெற்றோலிய வாயுவில் 12.5 சதவீதமானது, கட்டாராலேயே ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஒபெக் அமைப்பில், 57 ஆண்டுகளாகக் கட்டார் இருந்திருந்த நிலையில், இம்முடிவு, இலகுவானதாக அமைந்திருக்கவில்லை எனத் தெரிவித்த அமைச்சர் அல்-காபி, எனினும், ஒபெக் அமைப்பின் உற்பத்தி முடிவுகளில் தமது நாட்டின் தாக்கம், மிகக் குறைவானது என்று குறிப்பிட்டார்.

கட்டாரின் இந்த முடிவு, ஏற்றுமதித் தரவுகளின் அடிப்படையில், யதார்த்தபூர்வமாகத் தெரிந்தாலும், கட்டாருக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் காணப்படும் முரண்பாடுகள் காரணமாகவும், இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஒபெக் நிறுவனம், சவூதி அரேபியாவால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. அதே சவூதி அரேபியா தான், மேலும் சில எண்ணெய் வளமுள்ள நாடுகளை இணைத்துக்கொண்டு, கடந்தாண்டு ஜூனில், கட்டாருடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டித்திருந்தது என்பது ஞாபகப்படுத்தத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X