2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

காயமடைந்த ஹூதி போராளிகள் வெளியேற அனுமதி

Editorial   / 2018 டிசெம்பர் 04 , மு.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

யேமனில் இடம்பெற்றுவரும் தொடர்ச்சியான போரில், முன்னேற்றகரமான ஒரு விடயமாக, காயமடைந்த ஹூதி போராளிகள், மருத்துவக் காரணங்களுக்காக அவர்களின் பகுதிகளிலிருந்து வெளியேறுவதற்கு, அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்படும் சவூதி அரேபியா தலைமையிலான இராணுவக் கூட்டணி அனுமதியளித்துள்ளது.

இப்போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில், ஐக்கிய நாடுகளால் மத்தியஸ்தம் வகிக்கப்படும் பேச்சுவார்த்தைகள், சுவீடனில் இவ்வாரம் இடம்பெறவுள்ள நிலையில், அப்பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதற்காக ஹூதி ஆயுததாரிகளால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளில் முக்கியமான நிபந்தனை, இதன்மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காயமடைந்த 50 ஹூதிகளை, அவர்களின் பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி, ஹூதிகளால் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ள சனாவிலிருந்து, மருத்துவ சிகிச்சைகளுக்காக அவர்களை ஓமானுக்கு அழைத்துச் செல்வதற்கான விமானம், சனாவில் நேற்றுத் தரையிறங்கியிருந்தது.

இதேவேளை, இப்போர் தொடர்பான பேச்சுவார்த்தைகள், நாளை (05) ஆரம்பிக்கக்கூடுமென, குறித்த விடயம் தொடர்பில் அறிந்த தகவல்கள் மூலங்கள் சில தெரிவித்தன.

இப்போர் காரணமாக, 10,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு, யேமனில் பல்வேறு பகுதிகளிலும், பட்டினி நிலைமைக்கான ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு, மேற்கத்தேய நாடுகளால் சவூதிக்கு விடுக்கப்பட்ட அழுத்தத்தின் விளைவாகவே, பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக, இரண்டு தரப்புகளும் சுவீடனுக்குச் சென்றால், அதுவே மிகப்பெரிய முன்னேற்றமாக அமையுமென, அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .