2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

‘சாதி பாகுபாடே வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை’

Editorial   / 2017 ஒக்டோபர் 13 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சாதிப் பாகுபாடுதான், கிராமங்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது என்று, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

நானா தேஸ்முக்கின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா, புதுடெல்லியில் இடம்பெற்றபோது உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

“சாதியும், அதனால் ஏற்பட்ட பாகுபாடுகளும்தான், நம் நாட்டு கிராமங்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ளன. சாதி, நம் கிராமங்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. ஒருங்கிணைந்த கிராமப்புற வளர்ச்சி மற்றும் கிராமப்புற மேம்பாடு மட்டுமே, நமது கிராமங்களை மீட்டு, வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல முடியும். கிராம வளர்ச்சியே, ஒரு நாட்டின் வளர்ச்சியை நிர்ணயம் செய்கிறது. 

“நாட்டில் கிராமங்களின் வளர்ச்சிக்கு, தொழில்நுட்ப வசதிகள் எல்லாம் வரவேண்டும். நாட்டில், வரிசையில் கடைசியில் நிற்கும் குடிமகனுக்கும் எல்லா பலன்களும் சென்று சேர வேண்டும். அதற்கான எல்லா ஆதாரங்களும், நம் நாட்டில் உள்ளன. கிராமங்களில் வளங்குன்றா வளர்ச்சியைக் கொண்டு வர வேண்டும். அதற்கு, தற்போதுள்ள தொழில்நுட்பங்களைக் கொண்டு, தேவையான மக்களுக்கு, எல்லா திட்டங்களையும் கொண்டுச் சேர்க்க வேண்டும். இது சிறந்த நிர்வாகத்தின் மூலம் சாத்தியமாகும். 

“எந்த ஒரு திட்டமும், அது ஆரம்பிக்கப்பட்டதற்கான நோக்கத்தில் இருந்து சற்றும் விலகாமல் அமல்படுத்த வேண்டும். அப்படி செய்தால், எந்தத் திட்டமும் வெற்றி பெற்றுவிடும். அரசாங்கத் திட்டங்கள் அமல்படுத்தும் போது, முடிவு சார்ந்த அணுகுமுறை வேண்டும். அதேபோல், திட்டங்களை முடிக்க, கால நிர்ணயம் முக்கியம். அகல் விளக்கு அல்லது மண் விளக்கு போன்ற கிராமங்களில், உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, நகரங்களில் உள்ளவர்கள் பயன்படுத்தினால் கூட, அது கிராம மக்களின் நல்வாழ்வுக்கு உதவியாக இருக்கும். கிராமங்களில் 24 மணி நேரமும் மின்சார வசதி, தண்ணீர் விநியோகம், இணையதளத்துக்கான ஆப்டிகல் கேபிள் இணைப்பு ஆகியவை இருந்து விட்டால் போதும். டொக்டர்களும் ஆசிரியர்களும், அதிகாரிகளும் கிராமங்களில் பணியாற்ற தயங்க மாட்டார்கள். அவர்கள், நீண்ட நாட்கள் கிராமங்களில் தங்கும் போது, தானாகவே அவர்களால் கிராம மக்களுக்கு பலன் கிடைக்கும். நகரங்களிலுள்ள வசதிகள் இப்போது கிராமங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றன. 

“நகரங்களில் உள்ள எல்லா வசதி வாய்ப்புகளும் கிராமத்தில் உள்ள சிறுவனுக்கும் கிடைக்க வேண்டும்” என்று அவர் இதன்போது கூறினார்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .