2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிரியாவில் போர் முற்றுகிறது

Editorial   / 2018 பெப்ரவரி 12 , மு.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவில் கடந்த 7 ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் போர், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் வீழ்ச்சியோடு, பலவீனமடையலாம் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அங்கு பல்வேறு வழிகளில் மோதல் நிலைமை அதிகரிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இதன் ஓர் அங்கமாக, நேற்று முன்தினம் மாத்திரம், இஸ்‌ரேலின் போர்விமானமொன்றும், துருக்கியின் ஹெலிகொப்டரொன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டன. 

தன்னுடைய நாட்டு வான் எல்லைக்குள், ஈரானிய ட்ரோன்கள் உட்புகுந்தன எனக் குற்றஞ்சாட்டிய இஸ்‌ரேல், சிரியாவுக்குள் காணப்படும் ஈரானால் ஆதரவளிக்கப்படும் ஆயுதக்குழுக்களின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. நேற்று முன்தினம் நடத்தப்பட்ட இத்தாக்குதல்களில், இஸ்‌ரேலின் 8 போர்விமானங்கள் பங்குபற்றின என்று தெரிவிக்கப்படுகிறது. 

இதன்போதே, எப்-16 வகை போர்விமானமொன்று, சிரியாவின் விமான எதிர்ப்பு ஏவுகணையால் வீழ்த்தப்பட்டது. இவ்விமானம், இஸ்‌ரேலின் வடக்குப் பகுதியில் நொறுங்கி வீழ்ந்தது. இரண்டு விமானிகளும், இதன்போது வெளியேற்றப்பட்டனர். இருவரும் காயமடைந்ததோடு, அதிலொருவர் படுகாயமடைந்திருந்தார். 

இஸ்‌ரேலின் இராணுவ நடவடிக்கையின் காரணமாக, ஈரானிய, சிரிய இலக்குகள் என, 12 இலக்குகள் இலக்குவைக்கப்பட்டன என, இஸ்‌ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதில், சிரிய வான் பாதுகாப்புக் கட்டமைப்புகளும் உள்ளடங்குகின்றன. 

இந்த விமானத்தை வீழ்த்தியமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த லெபனானைச் சேர்ந்த, ஈரானால் ஆதரவளிக்கப்படும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழு, இஸ்‌ரேலின் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியமை, புதிய கேந்திர யுத்தியின் ஓர் அங்கம் எனக் குறிப்பிட்டது. இதன்மூலமாக, சிரிய வான்பரப்புக்குள், இஸ்‌ரேலிய விமானங்கள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதே தமது நோக்கமென, அக்குழு குறிப்பிட்டது. 

சிரிய உள்நாட்டு யுத்தத்தில், சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டுக்கு ஆதரவாகவே, ஈரான் செயற்படுகிறது. எனவே, ஈரானுக்கும் இஸ்‌ரேலுக்கும் இடையிலான மோதல், அங்கு பிளவை மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 

அதிலும் குறிப்பாக, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டெல் அவிவ்விலுள்ள இராணுவத் தலைமையகத்துக்குச் சென்றமை, இவ்விடயத்தில் இஸ்‌ரேலின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்தது. 

இதேவேளை, இஸ்‌ரேலின் விமானத்தின் நிலைமை இவ்வாறு இருக்க, குர்திஷ்கள் மீதான இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுவரும் துருக்கியின் ஹெலிகொப்டரொன்றும், நேற்று முன்தினம் சுட்டு வீழ்த்தப்பட்டது. 

துருக்கி - சிரிய எல்லைப் பகுதி நகரான அஃப்ரினில் வைத்தே, குர்திஷ் போராளிகளால் இது சுட்டு வீழ்த்தப்பட்டது என, துருக்கி இராணுவம் தெரிவித்தது. இதன்போது, ஹெலிகொப்டரில் காணப்பட்ட இரண்டு படையினரும் கொல்லப்பட்டனர் எனவும் அறிவிக்கப்பட்டது. இவ்வாறு ஹெலிகொப்டரைச் சுட்டு வீழ்த்தியதாக, குர்திஷ் போராளிகளும் உறுதிப்படுத்தினர். 

இது தொடர்பான உறுதிப்படுத்தலை, துருக்கி ஜனாதிபதி றிசெப் தய்யீர் ஏர்டோவானும் மேற்கொண்டார். “எங்களுடைய ஹெலிகொப்டர்களுள் ஒன்று, சமீபத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இவ்வாறான விடயங்கள் நடைபெறும் தான். நாங்கள், போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். நாங்கள், ஹெலிகொப்டர் ஒன்றை இழக்கக்கூடும், ஆனால் அதற்கான பலனை, அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும்” என்று தெரிவித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X