2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிரியாவில் மூன்று நாட்களில் 136 பேர் பலி

Editorial   / 2018 பெப்ரவரி 09 , மு.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்ஸுக்கு அருகிலுள்ள, எதிரணிப் போராளிகளால் கட்டுப்படுத்தப்படும் பகுதிகள் மீது, சிரிய அரசாங்க விமானங்களால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் காரணமாக, மூன்று நாட்களில் குறைந்தது 136 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்படுகிறது. சிரிய முரண்பாட்டில், கடந்த பல மாதங்களில் ஏற்பட்ட மோசமான நிலைமையாக இது கருதப்படுகிறது. 

கிழக்கு கெளட்டா பகுதியில், கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் மாத்திரம், 80 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என அறிவிக்கப்படுகிறது. ஏற்கெனவே வழங்கப்பட்ட தகவல்களின்படி, 63 பேர் கொல்லப்பட்டிருந்தனர் எனக் கூறப்பட்டது. அவ்வெண்ணிக்கையே, 80 என அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது, சுமார் 200 பேர் காயமடைந்தனர் என்றும் குறிப்பிடுகிறது. 

இது, கடந்த 9 மாதங்களில், சிரிய முரண்பாட்டில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அதிக எண்ணிக்கையான உயிரிழப்புகள் ஆகும்.    அதேபோல், நேற்று முன்தினம் (07) மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், 34 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டோரில், 10க்கும் மேற்பட்டோர் சிறுவர்கள் எனக் குறிப்பிடப்படுகிறது. 

இந்த உயிரிழப்புகள் மீதான சர்வதேசக் கவனம் எழுந்துள்ள நிலையில், நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில், குறைந்தது 22 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என, மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இத்தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள், மேலும் அதிகரிக்குமென்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 3 நாட்களிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 150ஐ எட்டும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

400,000 பேரைச் சனத்தொகையாகக் கொண்ட கிழக்கு கௌட்டா மீது, சிரிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கை, ஆரம்பத்திலிருந்தே உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில், தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. 

அதேபோல், அரசாங்கத்தால், குளோரின் வாயு பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளும் அதிகரித்துள்ளன. கருத்துத் தெரிவித்த பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சர் ஜோன்-வைவெஸ் லே ட்ரையன், சிரிய அரசாங்கம், குளோரின் ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது என்றே, அனைத்து ஆதாரங்களும் குறிப்பிடுகின்றன என்று தெரிவித்தார். 

அதேபோல், சில நாட்களுக்கு முன்னர் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த ஐ.அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், கடந்த 30 நாட்களில் மாத்திரம், குறைந்தது 6 இரசாயனத் தாக்குதல்கள் எனச் சந்தேகிக்கப்படும் தாக்குதல்களை அடையாஙக்கண்டுள்ளதாகத் தெரிவித்திருந்தது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .