2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

சிரியாவில் 100 ஆயுததாரிகள் பலியாகினர்

Editorial   / 2018 பெப்ரவரி 09 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் கிழக்குப் பகுதிப் பிராந்தியமான டெய்ர் இஸொர் பிராந்தியத்தில், சிரிய அரசாங்கத்துக்கு விசுவாசமான ஆயுதக்குழுக்கள் மீது, ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான இராணுவக் கூட்டணியால் நடத்தப்பட்ட தாக்குதல்களில், குறைந்தது 100 ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு ஆரம்பிக்கப்பட்ட இத்தாக்குதல்கள், நேற்றுக் காலை வரை தொடர்ந்திருந்தன.

சிரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கு எதிராகப் போராடிவரும், ஐ.அமெரிக்கக் கூட்டணிக்கு ஆதரவான ஆயுதக்குழுவான சிரிய ஜனநாயகப் படைகளின் தலைமையகம் மீது, சிரியாவுக்கு ஆதரவான ஆயுதக்குழுக்கள், தாமாகவே தாக்குதலொன்றைத் தொடுத்ததைத் தொடர்ந்தே, ஐ.அமெரிக்கக் கூட்டணியின் பதில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன என, அக்கூட்டணி தெரிவிக்கிறது.

ரஷ்யாவுக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான வாய்மூலமான இணக்கப்பாட்டின்படி, யூப்பிரட்டீஸ் நதிக்கு மேற்குப் பக்கமாக, ரஷ்யாவுக்கு ஆதரவான ஆயுதக்குழுக்களும், கிழக்குப் பக்கமாக, ஐ.அமெரிக்காவுக்கு ஆதரவான ஆயுதக்குழுக்களும், ஐ.எஸ்.ஐ.எஸ்-ஐ எதிர்த்துப் போரிடும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எனினும், கிழக்குப் பகுதியில் காணப்பட்ட ஆயுதக்குழுக்கள் மீது, திடீரெனத் தாக்குதல் நடத்தப்பட்டது எனவும், சுமார் 500 ஆயுததாரிகள் இதில் பங்குபற்றினர் எனவும், ஐ.அமெரிக்கக் கூட்டணி தெரிவிக்கின்றன.

தமது தாக்குதல்களை, தம்மைப் பாதுகாப்பதற்கான தாக்குதல்கள் என ஐ.அமெரிக்கக் கூட்டணி வர்ணித்ததோடு, 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்று கூறியதே தவிர, எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற உறுதியான தகவலை வழங்கியிருக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .