2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிறையிலிருந்து விடுக்கப்பட்டவர் தாக்குதல்; மூவர் பலியாகினர்

Editorial   / 2018 மே 31 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றவாளியென நிரூபிக்கப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்ட ஒருவர், தற்காலிகமாக விடுவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே பெல்ஜியத்தில் நடத்திய தாக்குதலில், மூவர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய தாக்குதலில், அவர் கொல்லப்பட்டார்.

சிறையிலிருக்கும் போது, தீவிரவாதக் கொள்கைகளை நோக்கி ஈர்க்கப்பட்ட அவர், பெல்ஜியத்தின் லீஜ் நகரத்திலேயே தாக்குதல்களை மேற்கொண்டார்.

பெஞ்சமின் ஹேர்மான் என்று அடையாளங் காணப்பட்டுள்ள அவர், இரண்டு பொலிஸாரையும், சாதாரண பொதுமகன் ஒருவரையும் கொன்றிருந்தார். இதை, “பயங்கரவாதத் தாக்குதல்” என, பொலிஸார் வர்ணித்தனர்.

பல்வேறான குற்றங்கள் தொடர்பில், 2003ஆம் ஆண்டிலிருந்து சிறைச்சாலைக்குச் செல்வதும் வெளியே வருவதுமாக இருந்த அவர், சிறைச்சாலைக்குள் வைத்து, தீவிரவாதப் பாதைக்கு மாறினார். தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போது, இஸ்லாம் மதத்தைப் பின்பற்ற ஆரம்பித்த அவர், தீவிரவாதப் போக்குடையவர் என, அதிகாரிகளால் சந்தேகிக்கப்படும் ஒருவராக இருந்தார்.

பெல்ஜியத்தின் சட்டப்படி, தீவிரவாதப் போக்கை வெளிப்படுத்துபவர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவர் பற்றிய தகவல்கள், நாட்டின் அனைத்துப் பொலிஸாருடனும் ஏனைய அதிகாரிகளுடனும் பகிரப்படுவதில்லை. எனவே, இவர் பற்றிய தகவல்கள் பகிரப்பட்டிருக்கவில்லை.

இம்முறை அவர், 14ஆவது தடவையாகச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததோடு, 2020ஆம் ஆண்டே விடுவிக்கப்படவிருந்த நிலையில், அதற்கு முன்னர் சமுதாயத்துடன் மீளஇணைந்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதற்காகவே, தற்காலிக விடுமுறையில் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், அவ்வாறு விடுவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே அவர் இவ்வாறு குற்றச்செயலில் ஈடுபட்டிருக்கின்றமை, பொலிஸாரிடமும் சிறைச்சாலை அதிகாரிகளிடமும் பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .