2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தினகரனுக்கு விழுந்தது ஆப்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 11 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி தினகரன், கட்சியில் எந்தவொரு பதவியையும் வகிக்க முடியாது என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தின் போது, நேற்று (10​) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், பிரிந்துள்ள அ.தி.மு.கவின் அணிகள், இணையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.கவின் 26 அலுவலக நிர்வாகிகளினால் கைச்சாத்திடப்பட்டுள்ள குறித்த தீர்மானப் பத்திரத்தில், டி.டி.வி தினகரனால் மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று, கட்சித் தொண்டர்களிடம் கோரப்பட்டுள்ளது. மேலும், அ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளரை நியமித்த பொதுச் செயலாளரின் நியமனம் குறித்தும், தேர்தல் ஆணையகத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், அந்தப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் என்று, ‘அம்மா’வையே நாம் அழைக்கிறோம். அந்த இடத்துக்கு, வேறு எவரையும் நியமிக்க முடியாது. அதை, அவ்வாறே தொடர்வ​தற்கே நாம் விரும்புகின்றோம்” என்று தீர்மானப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும், கட்சியில், ஓ.பன்னீர்செல்வம் பதவி வகிக்க மாட்டார் என்றும் ஆனால், கட்சியைக் கவனிக்கும் மற்றும் ஒருங்கிணைக்கும் குழுவை தலைமைதாங்கி, அதில் அங்கத்துவம் வகிப்பார் என்றும், அந்தக் குழுவக்கு, ஒவ்வொரு பிரிவிலிருந்தும் மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.  

இதேவேளை, இன்று (11) புதுடெல்லியில் இடம்பெறவுள்ள, பிரதமர் நரேந்திர மோடியுடனான, முதலமைச்சர் பழனிசாமி மற்றும் ஓ.பிஎஸ்ஸின் சந்திப்பின் பின்னர், பிரிந்துள்ள கட்சி இணையும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, இது தொடர்புடைய அறிவித்தலை, இருவரும், நாளை (12) வெளியிடுவர் என்றும் கூறப்படுகின்றது.  

இதேவேளை, தினகரனுக்கு ஆதரவு வழங்கும் சில உறுப்பினர்கள் கட்சிக்குள் இருந்தால், அவர்கள், கூடிய விரைவில் ஒழுங்குபடுத்தப்படுவார்கள் என்றும் இந்தக் கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது.  

முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான இந்தத் திடீர் நடவடிக்கையினால், சுமார் 7 மாதங்களாக குழறுபடிகளுக்குள் சிக்கியிருந்த
அ.தி.மு.க, சாதாரண நிலைமைக்குத்திரும்பி, கட்சிப்பணிகளில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  

‘நான் செயற்படுவதற்கு தடை இல்லை’

தான் செயற்பட, எந்தத் தடையும் இல்லை என தினகரன் கூறியுள்ளார். 

“என்னை நீக்கியதாக வெளியான தீர்மானத்தில், வெறும் அ.தி.மு.க என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையகத்தின் உத்தரவு படி, அ.தி.மு.க (அம்மா) என்று தான் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இதுவே விதிமீறல், எனவே, அந்தத் தீர்மானம் செல்லாது. தேர்தல் ஆணையகத்தில் புகாரளித்தால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பதவியிழக்க நேரிடும். 

“சசிகலாவால் நியமிக்கப்பட்ட பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், கட்சிப் பணத்தை கையாளும் போது, நான் துணைப் பொதுச்செயலாளராகச் செயற்பட, எப்படித் தடை விதிக்க முடியும்? எனவே, நான் செயற்பட, எந்தத் தடையும் இல்லை.  

“ஆர்.கே நகர் இடைத்தேர்தல் சமயத்தில், தேர்தல் ஆணையகத்தில், தொப்பி சின்னம், கட்சியின் பெயர் ஆகியவற்றைப் பெறும் போது, என்னை துணைப் பொதுச்செயலாளராக அங்கிகரித்தவர்கள் இவர்கள் தானே. இப்போது ஏன் மறுக்கிறார்கள்?. 

“நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் பணியில் உள்ளேன். பதவியில் இருக்கிற வரை, கிடைத்ததை சுருட்டிக்கொண்டு செல்ல, தீர்க்கமாக அமைச்சர்கள் இருக்கின்றனர். முதலமைச்சர் பழனிசாமிக்கும், மடியில் கனம் இருப்பதால் பயம் இருக்கிறது. 

“கட்சிவிரோதச் செயல்களில் ஈடுபடும் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் நீக்க, எனக்கு அதிகாரம் உண்டு” என்று அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X