2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

துருக்கியின் தாக்குதல்கள் வீரியமடைகின்றன

Editorial   / 2018 பெப்ரவரி 02 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் அஃப்ரின் மாகாணத்தின் மீது, குர்திஷ் ஆயுததாரிகளை இலக்குவைத்து, துருக்கியால் மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கையின் வீரியம் அதிகரித்திருப்பதன் காரணமாக, அங்கு மோதல்களும் அதிகரித்துள்ளன. துருக்கியின் கடுமையான விமானத் தாக்குதல்களிலிருந்து தப்புவதற்கு, அங்கு வாழும் பொதுமக்கள் தப்பியோடுகின்றனர் எனவும் வெளிப்படுத்தப்படுகிறது.

துருக்கிப் படையினரும் துருக்கிக்கு ஆதரவான சிரிய ஆயுததாரிகளும், “சமாதானச் சின்ன நடவடிக்கை” என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் தமது நடவடிக்கையை விரிவுபடுத்தியுள்ளனர். அதிகரித்துவரும் பொதுமக்களின் உயிரிழப்புகள், சர்வதேச அழுத்தம் ஆகியவற்றுக்கு மத்தியிலும், அஃப்ரினின் சிற்றூர்ப் பகுதிக்கு, இந்நடவடிக்கை சென்றுள்ளது.

மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகத்தின் தகவலின்படி, ஜன்டைரிஸ், ராஜோ ஆகிய பகுதிகளில், துருக்கிய விமானத் தாக்குதல்களின் உதவியுடன், தரைப்படைகள் முன்னகர்ந்து வருகின்றன. அத்தோடு, எல்லைக் கிராமமான ஷின்காலை, துருக்கிப் படைகள் கைப்பற்றியுள்ளன.

துருக்கிப் படையினரின் நடவடிக்கை காரணமாக, ஓரிரவுக்குள் மாத்திரம், குர்திஷ் ஆயுததாரிகளின் 22 நிலைகளை அழித்தொழித்ததாக, துருக்கி இராணுவத்தினர், நேற்று முன்தினம் (31) தெரிவித்தனர்.

தமது நடவடிக்கை காரணமாக, பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை என, துருக்கி தெரிவிக்கிறது. ஆனால், மோதல்களின் சிக்கிய பொதுமக்களின் சடலங்களை நாளாந்தம் பெறுவதாக, அஃப்ரினிலுள்ள வைத்தியசாலைகள் தெரிவிக்கின்றன.

மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகத்தின் தகவலின்படி, புதன்கிழமை வரை, 21 சிறுவர்கள் உள்ளடங்கலாக 68 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

குர்திஷ் ஆயுததாரிகளில் 91 பேரும், துருக்கிக்கு ஆதரவான ஆயுததாரிகளில் 85 பேரும், இதில் கொல்லப்பட்ட ஏனையோராவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .