2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

படகு கவிழ்ந்ததில் 46 எதியோப்பியர்கள் பலி

Editorial   / 2018 ஜூன் 08 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதியோப்பிய குடியேற்றவாசிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகொன்று, யேமனுக்கு அண்மையாகக் கவிழ்ந்ததில், அப்படகில் பயணம் செய்தோரில் 46 பேர் பலியாகினர் எனவும், மேலும் 16 பேரைக் காணவில்லை எனவும், ஐக்கிய நாடுகளின் முகவராண்மையொன்று தெரிவித்துள்ளது.

சோமாலியாவின் பொஸாஸ்ஸோ துறைமுகத்திலிருந்து, செவ்வாய்க்கிழமை புறப்பட்ட இப்படகில், 83 ஆண்களும் 17 பெண்களுமாக, 100 பேர் காணப்பட்டுள்ளனர். யேமனிலும் அரேபிய வளைகுடாவிலும் வேலைகளைத் தேடும் நோக்கிலேயே அவர்கள் பயணித்தனர் என, குடியேற்றத்துக்கான சர்வதேச அமைப்புத் தெரிவித்தது.

எதியோப்பியாவில் நிலவும் போர், வறுமை, வேலையற்ற நிலைமை ஆகியவை காரணமாக, அந்நாட்டை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளது.

குறிப்பாக, எதியோப்பியாவைச் சேர்ந்த 101 பேர், யேமனை நோக்கி வந்த பின்னர், அவர்கள் செல்லவிருந்த துறைமுகம் மூடப்பட்டதால் தத்தளித்த போது, குடியேற்றத்துக்கான சர்வதேச அமைப்பால் அவர்கள் காப்பாற்றப்பட்டுச் சில நாட்களில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த, குடியேற்றத்துக்கான சர்வதேச அமைப்பின் நடவடிக்கைகளுக்கும் அவசர நிலைமைக்குமான பணிப்பாளர் மொஹமட் அப்டிக்கெர், இவ்வாறு ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து வருத்தத்தை வெளியிட்டார்.

“ஆபத்தான இந்தப் பயணத்தை, மாதந்தோறும் 7,000 வறுமையான குடியேற்றவாசிகள் மேற்கொள்கின்றனர். கடந்தாண்டு, 100,000 பேர் இவ்வாறு சென்றனர். அவர்கள், மோசமான முறையில் நடத்தப்படுவதோடு, கடுமையான சூழ்நிலைகளுக்குள் சிக்கியுள்ளனர். இது மாற்றப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X