2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பதவியிலிருந்து விலக ஸூமா தயார்?

Editorial   / 2018 பெப்ரவரி 08 , மு.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸூமாவின் எதிர்காலம் தொடர்பாக ஆராய்வதற்காக நடத்தப்படவிருந்த முக்கிய கூட்டமொன்றை, அந்நாட்டின் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி, பிற்போட்டுள்ளது. இதேவேளை, சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படின், பதவியிலிருந்து விலகுவதற்கு, ஜனாதிபதி ஸூமா தயாராக இருக்கிறார் என, தென்னாபிரிக்க ஊடகமொன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் நிறைவேற்றுச் செயற்குழுக் கூட்டம், கேப் டௌணில், நேற்று நடைபெறவிருந்தது. ஊழல் குற்றஞ்சாட்களாலும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியாலும் கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டுவரும் ஜனாதிபதியை, பதவியிலிருந்து நீக்குவதற்கான கூட்டமாகவே இது கருதப்பட்டது.

ஏற்கெனவே அழுத்தங்களை எதிர்கொண்டு வந்த ஜனாதிபதி, ஆளுங்கட்சியின் தலைமைப் பொறுப்பையும் அண்மையில் இழந்ததைத் தொடர்ந்து, இன்னமும் அதிக அழுத்தங்களை எதிர்கொண்டு வருகிறார்.

இந்நிலையிலேயே, இக்கூட்டத்தில் ஜனாதிபதியைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான முடிவு எடுக்கப்படலாம் என்று கருதப்பட்ட நிலையில், அக்கூட்டத்தை, பெப்ரவரி 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்க, திடீரென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவராக சிரில் ரமபோசா தெரிவுசெய்யப்பட்ட பின்னர், அடுத்த ஜனாதிபதியாக அவரே வருவாரென்பது, ஓரளவு உறுதியாகியுள்ளது. ஆனால், அடுத்தாண்டின் நடுப்பகுதி வரை, ஜனாதிபதி ஸூமாவின் ஆட்சிக்காலம் அமையவுள்ள நிலையில், அதிகாரப் போட்டி போன்ற நிலை உருவாகியுள்ளதெனக் கருதப்படுகிறது.

இந்நிலையில், இருவரும் இணைந்து, ஆட்சி மாற்றம் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக, இக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

தலைவர் ரமபோசாவுடனான பேச்சுவார்த்தைகளின் போது, தன்னால் வழங்கப்படும் நிபந்தனைகளுக்கு அவர் சம்மதித்தால், பதவியிலிருந்து விலகுவதற்கு, ஜனாதிபதி ஸூமா தயாராக இருக்கிறார் என்று, தற்போது செய்தி வெளியாகியுள்ளது. என்னவாறான நிபந்தனைகள் என, இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X