2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘புவேர்ட்டோ றிக்கோவில் 4,654 பேர் பலியாகினர்’

Editorial   / 2018 மே 31 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்கப் பிராந்தியமான புவேர்ட்டோ றிக்கோவில், கடந்தாண்டு ஏற்பட்ட மரியா சூறாவளியால், 4,645 பேர் உயிரிழந்தனர் என, புதிய அறிக்கையொன்றை வெளிப்படுத்தியுள்ளது. இச்சூறாவளியால், 64 பேர் உயிரிழந்தனர் என, அப்பிராந்திய அரசாங்கம் தொடர்ந்து கூறிவந்த நிலையில், அவ்வெண்ணிக்கையின் 72 மடங்குக்கும் அதிகமான எண்ணிக்கையை, புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி அணியொன்றின் தலைமையில், புவேர்ட்டோ றிக்கோவின் வசிப்போரிடம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் விளைவாகவே, புதிய அறிக்கை வெளியிடப்பட்டது.

புவேர்ட்டோ றிக்கோவின் கடந்த 90 ஆண்டுகால வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை அனர்த்தமாக, இச்சூறாவளி அமைந்திருந்த நிலையில், அதன் நேரடியான அல்லது மறைமுகமான தாக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாகவே ஆராயப்பட்டது. இதன்படி, இவ்வணியால் கணக்கெடுக்கப்பட்ட உயிரிழப்புகளில் அநேகமானவை, கடந்தாண்டின் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் டிசெம்பர் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் ஏற்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் மூன்றிலொரு பங்கினர், தாமதிக்கப்பட்ட அல்லது தடங்கலேற்பட்ட மருத்துப் பராமரிப்பு வசதிகள் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

தமது அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 4,654 என்ற எண்ணிக்கை, மிகவும் குறைவான எண்ணிக்கையாக அமையக்கூடுமெனத் தெரிவித்த அவ்வறிக்கை, புவேர்ட்டோ றிக்கோவின் மோசமான உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக, ஐ.அமெரிக்க அரசாங்கம் கணக்கிலெடுக்காமையை, இவ்வெண்ணிக்கைகள் வெளிப்படுத்துகின்றன எனத் தெரிவித்தது.

புவேர்ட்டோ றிக்கோவில் ஏற்பட்ட இச்சூறாவளி, அரசியல் ரீதியிலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இவ்விடயத்தில் போதுமான கவனமெடுத்திருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு, தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள இவ்வுயர் எண்ணிக்கை, அரசியல் ரீதியாகவும் சர்ச்சைகளை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வறிக்கையை வரவேற்றுள்ள புவேர்ட்டோ றிக்கோ அரசாங்கம், இது குறித்து ஆராயவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .