2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘மல்லரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டாம்’

Editorial   / 2018 பெப்ரவரி 07 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் கடந்த ஜனாதிபதித் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் விசேட வழக்குத் தொடுநர் றொபேர்ட் மல்லரின் விசாரணைகளில் ஆஜராக வேண்டாமென, அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு, அவரின் சட்டத்தரணிகள் வலியுறுத்தியுள்ளனர் எனத் தெரியவருகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு எனும் விடயத்தோடு, ட்ரம்ப் பிரசாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் தொடர்புகள் காணப்பட்டனவா என்றும் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப்பை நேர்காண, மல்லரின் குழு, ஏற்கெனவே கோரியிருந்தது எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஜனாதிபதி ட்ரம்ப்பும், விசாரணையை “பழிவாங்கும் நடவடிக்கை” எனவும் “கேவலமானது” எனவும் பல்வேறு தருணங்களில் விளித்திருந்தாலும், மல்லரின் குழுவின் முன்னால் ஆஜராகுவதற்குத் தயாராக இருப்பதாக, தொடர்ச்சியாகக் கூறிவந்தார். ஆனால், தனது சட்டத்தரணிகள், அம்முடிவில் தாக்கம் செலுத்துவார்கள் என்பதையும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாகச் செய்தி வெளியிட்டுள்ள நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை, இவ்விசாரணைகளின் போது, ஜனாதிபதி ட்ரம்ப் பொய் சொன்னால், அதுவே குற்றமாகிவிடும் என்பதால், இவ்விசாரணைகளில் அவர் ஆஜராகக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. மல்லரின் விசாரணையில், சத்தியத்தின் கீழ், ஜனாதிபதி ட்ரம்ப் வாக்குமூலம் வழங்கமாட்டார் என்ற போதிலும், விசாரணைகளின் போது பொய் கூறுதல் குற்றமாகும்.

ஜனாதிபதி ட்ரம்ப், இதற்கு முன்னர் ரஷ்யா தொடர்பில் பொய்களைக் கூறியதோடு, முரண்பாடான கருத்துகளையும் கூறியிருக்கிறார். எனவே, மல்லரின் விசாரணையில் அவர் பொய் கூறினார் என்று வெளிப்படுத்தப்படுமாயின், அதுவே புதிய பிரச்சினையாக மாறக்கூடுமென, ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் அஞ்சுகின்றனர்.

ஆனால், மல்லரின் விசாரணைக்கு ஒத்துழைக்க ஜனாதிபதி மறுப்பாராயின், ஜூரிகள் முன்னிலையில் ஜனாதிபதி ஆஜராக வேண்டுமென்ற அழைப்பாணையை, மல்லர் பிறப்பிக்கக்கூடும். அது பின்னர், உச்சநீதிமன்றத்தால் தீர்க்கப்படும் ஒன்றாக மாறக்கூடும். அதேபோல், அரசியல் ரீதியாகப் பார்க்கும் போது, ரஷ்யா விடயத்தில் அவர் மீது தவறுகள் காணப்படுகின்றன என்ற கருத்தை, மேலும் வலுப்படுத்தும் ஒன்றாகவும் அது மாறக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .