2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மியான்மார் வைத்த மிதிவெடியில் விவசாயி சிக்கினார்

Editorial   / 2018 பெப்ரவரி 06 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மாருக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான எல்லைக்கு அருகில், மியான்மார் இராணுவத்தினரால் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் மிதிவெடியில் கால்களை வைத்த பங்களாதேஷ் விவசாயியொருவர், தனது இரு கால்களையும் இழந்துள்ளார். இது, மியான்மார் இராணுவம் மீதான விமர்சனங்களை மேலும் அதிகரித்துள்ளது.

ராக்கைன் மாநிலத்தில் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக, பங்களாதேஷை நோக்கி இடம்பெயர்ந்த றோகிஞ்சா அகதிகள், மீண்டும் நாட்டுக்குத் திரும்பி வருவதைத் தடுக்கும் நோக்கில், இரு நாடுகளுக்குமிடையிலான எல்லைப் பகுதியில், மியான்மார் இராணுவத்தினரால், மிதிவெடிகள் புதைக்கப்பட்டன என, கடந்தாண்டே குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. எனினும் அக்குற்றச்சாட்டை, மியான்மார் இராணுவத்தினர் மறுத்திருந்தனர்.

இந்நிலையிலேயே, பங்களாதேஷின் தெற்குப் பகுதி எல்லை நகரமான நைகொங்சாரியைச் சேர்ந்த விவசாயியான பதுயுர் ரஹ்மார் என்பவர், கடந்த சனிக்கிழமை, எல்லையைத் தாண்டிச் சென்றுள்ளார். அவருடைய பசுவொன்று, எல்லையைத் தாண்டிச் செல்ல, அதைப் பிடிப்பதற்காகவே அவர் சென்றுள்ளார்.

அதன்போதே அவர், மிதிவெடியொன்றின் மீது கால்வைத்தார் என்றும், ஆரம்பத்தில் சிறிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், அதன் பின்னர் சிட்டகொங்கிலுள்ள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் எனவும், பங்களாதேஷ் அதிகாரியொருவர் தெரிவித்தார். குறித்த விவசாயியின் உடல்நிலை, இன்னமும் மோசமான நிலையிலேயே காணப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் இடம்பெற்ற பகுதியில், எல்லை வேலிகள் எவையும் கிடையாது எனவும், இரு தரப்புப் பசுக்களும், மாறி மாறி மற்றைய பகுதிகளுக்குச் செல்வது வழக்கமெனவும், அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

ஏற்கெனவே, இனவழிப்புக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுவரும் மியான்மார் இராணுவத்தினர் மீது, தற்போது மேலும் விமர்சனங்கள் அதிகரிக்கும் நிலை, இதன் காரணமாக ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .