2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மீண்டும் சர்ச்சையில் ட்ரம்ப்பின் டுவீட்கள்

Editorial   / 2017 டிசெம்பர் 05 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் டுவீட்கள், மீண்டுமொரு முறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. முதலாவதாக, மைக்கல் ஃபிளின் பற்றிய டுவீட்கள் தொடர்பான சர்ச்சை நீடிப்பதோடு, தற்போது அவர், புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகம் (FBI) மீது முன்வைத்துள்ள விமர்சனங்களும், அதிக கவனத்தை ஈர்த்துள்ளன.

மைக்கல் ஃபிளின், உப ஜனாதிபதியிடமும் புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகத்திடமும் பொய் கூறினார் என்பதற்காகவே அவரைப் பதவியிலிருந்து நீக்கியதாக, ஜனாதிபதி ட்ரம்ப் பகிர்ந்த டுவீட் தெரிவித்தது.

இக்கருத்து, புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகத்திடம் பொய் சொன்னார் என்பதைத் தெரிந்து கொண்ட பின்னர் தான், அவர் மீதான விசாரணைகளைக் கைவிடுமாறு, புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகத்தின் அப்போதைய பணிப்பாளர் ஜேம்ஸ் கோமியைக் கோரினார் எனவும், அவ்வாறாயின் அது, நீதியை மறிக்கின்ற ஒன்றாக மாறுமெனவும் கருதப்பட்டது.

இந்நிலையில், அந்த டுவீட்டை, ஜனாதிபதியின் தனிப்பட்ட சட்டத்தரணியான ஜோன் டோவ்ட்டே எழுதிக் கொடுத்திருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதை வெளிப்படுத்துவது போலக் கருத்துத் தெரிவித்துள்ள ஜோன் டோவ்ட், சொல்ல வந்த விடயத்தைத் தவறாகக் கூறிவிட்டார் என்று குறிப்பிட்டார். புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகத்திடம் ஃபிளின் பொய் கூறினார் என்பது, ஃபிளின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் போதே தெரியுமெனவும் குறிப்பிட்டார்.

ஆனால் அதே கருத்தைத் தெரிவிக்கும் போது, இன்னொரு கருத்தையும் டோவ்ட் வெளிப்படுத்தினார்.

அப்போது பதில் சட்டமா அதிபராக சாலி யேட்ஸ், வெள்ளை மாளிகையின் சட்டத்தரணியிடம், ஃபிளினின் பொய் தொடர்பாகக் கூறியிருந்தார் எனவும், அதை ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் வெள்ளை மாளிகையின் சட்டத்தரணி கூறியிருந்தார் எனவும் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக, ஜனவரி அல்லது பெப்ரவரி மாதத்திலேயே, புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகத்திடம் ஃபிளின் பொய் கூறினார் என்ற விடயம், ஜனாதிபதி ட்ரம்ப்புக்குத் தெரிந்திருந்தது என, அவரின் சட்டத்தரணியே வெளிப்படுத்தியுள்ளார்.

மறுபக்கமாக, ஹிலாரி கிளின்டன் மீதான மின்னஞ்சல் விசாரணைகளில் பங்கெடுத்த, புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர், கடந்தாண்டில் ட்ரம்ப்புக்கு எதிரான குறுஞ்செய்திகளை அனுப்பினார் என்ற விடயம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இடமாற்றம் செய்யப்பட்டார் என்ற விடயத்தை, ஜனாதிபதி ட்ரம்ப், தனக்கான பக்க நியாயமாகப் பிடித்துக் கொண்டுள்ளார்.

புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகம் மீது, தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், அப்பணியகத்தின் பெயர் மோசமடைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் அரசியல் தொடர்பாக, மறைமுகமான டுவீட்களை வெளியிட்டு வந்த, ஜனாதிபதி ட்ரம்ப்பால் புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகத்தின் பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஜேம்ஸ் கோமி, ஜனாதிபதி ட்ரம்ப்பின் சமீபத்திய கருத்துகளுக்கும், மறைமுகமாகப் பதிலளித்துள்ளார்.

“இந்த உண்மையை, அமெரிக்க மக்கள் அறிய வேண்டுமென நான் விரும்புகிறேன். புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகம் நேர்மையானது. புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகம் பலமானது. அத்தோடு அது, எப்போதும் சுயாதீனமானது” என, அவர் டுவீட்டொன்றில் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .