2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’ரஷ்ய, சீனத் தலைவர்களையும் கிம் விரைவில் சந்திக்கிறார்’

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரியத் தீபகற்பத்தில் பதற்றத்தைத் தணிப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளின் ஓர் அங்கமாக, சீன, ரஷ்யத் தலைவர்களையும், வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன் விரைவில் சந்திப்பாரென எதிர்பார்ப்பதாக, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக நேற்று (08) கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மூன், ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் வடகொரியத் தலைவர் கிம்முக்கும் இடையில் நடத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ள இரண்டாவது சந்திப்புக்கு வேறானதாக, இச்சந்திப்புகள் அமையுமெனக் குறிப்பிட்டார். 

அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மூன், ரஷ்யாவுக்கு விஜயம் செய்து, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை, வடகொரியத் தலைவர் கிம் சந்திப்பாரெனவும், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், வடகொரியாவுக்கு விஜயம் செய்து அவரைச் சந்திப்பாரெனவும் குறிப்பிட்டார். 

அதேபோல், ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபேயும் வடகொரியத் தலைவரும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளனவெனத் தெரிவித்த ஜனாதிபதி மூன், “கொரியத் தீபகற்பத்தில் புதிய ஒழுங்கொன்று உருவாக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார். 

சீன ஜனாதிபதி ஸியும் வடகொரியத் தலைவர் கிம்மும், சீனாவில் வைத்து, இவ்வாண்டில் 3 தடவைகள் சந்தித்துள்ளனர். ஆனால், சீன ஜனாதிபதியின் வடகொரிய விஜயம், முக்கியமானதாக அமையும். மறுபக்கமாக, ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் வடகொரியத் தலைவரும் இதுவரை சந்தித்ததில்லை. ஆனால், மொஸ்கோவுக்கு வருமாறு, ஜனாதிபதி புட்டின், வடகொரியத் தலைவரை அழைத்திருந்தார். 

ஜப்பானைப் பொறுத்தவரை, வடகொரியா தொடர்பில் கடும்போக்கையே கடைப்பிடித்து வந்த நாடாக உள்ள போதிலும், வடகொரியத் தலைவரைச் சந்திப்பதற்குத் தயார் என்ற ரீதியிலான சமிக்ஞைகளை, ஜப்பானியப் பிரதமர் அபே, வெளிப்படுத்தியிருந்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .