2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விட்டுக் கொடுத்தார் மேர்க்கெல்; அரசாங்கத்துக்கு இணக்கம்

Editorial   / 2018 பெப்ரவரி 09 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியில் அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக, அந்நாட்டின் சான்செலர் அங்கெலா மேர்க்கெலின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியக் கட்சிக்கும் சமூக ஜனநாயகவாதிகள் கட்சிக்கும் இடையில், இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும், முக்கியமான விட்டுக்கொடுப்புகளை, மேர்க்கெலின் கட்சி மேற்கொண்ட பின்னரே, இது சாத்தியமாகியுள்ளது.

கடந்தாண்டு செப்டெம்பரில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில், மேர்க்கெலின் கூட்டணிக்கு அதிக ஆசனங்கள் கிடைத்தாலும், அறுதிப் பெரும்பான்மை கிடைத்திருக்கவில்லை. இதைத் தொடர்ந்து, அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.

ஆரம்பத்தில் ஏனைய கட்சிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடையவே, இதுவரை கூட்டணியில் அங்கம் வகித்து, தேர்தலுக்கு முன்னராகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்த சமூக ஜனநாயகவாதிகள் கட்சியோடு, பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையிலேயே, இப்பேச்சுவார்த்தைகள் தற்போது வெற்றியளித்துள்ளன. இதன்படி, இதுவரை காலமும் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியக் கட்சியிடம் காணப்பட்ட நிதியமைச்சு, சமூக ஜனநாயகவாதிகள் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. சான்செலராக மேர்க்கெல் பதவி வகித்தாலும், முக்கியமான நிதியமைச்சு, மற்றைய கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளமை, மிகப்பெரிய விட்டுக்கொடுப்பாக அமைந்துள்ளது. அதேபோன்று, உள்விவகார அமைச்சும், அக்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பதவியை, ஹோர்ஸ்ட் சீஹோஃபெர் என்பவர் வகிக்கவுள்ளார். இவர், குடிவரவுக்கு எதிரானவராகக் கருதப்படுகிறார்.

மேர்க்கெலின் கட்சிக்கு, பொருளாதாரம், பாதுகாப்பு, கல்வி, விவசாய அமைச்சுகள் கிடைக்கின்றன.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் முடிவில், சமூக ஜனநாயகவாதிகள் கட்சிக்கே, அதிகளவு நன்மை கிடைத்துள்ளது என, ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது, ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமான ஜேர்மனியில் மாத்திரமன்றி, முழு ஐரோப்பாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடுமெனக் கருதப்படுகிறது.

கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும், இந்த இணக்கத்துக்கு, சமூக ஜனநாயகவாதிகள் கட்சியின் 464,000 உறுப்பினர்களும் வாக்களித்து, அங்கிகரிக்க வேண்டிய தேவையுள்ளது. அவர்கள் நிராகரித்தால், இவ்விணக்கம் தோல்வியடையும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .