2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘வெறுமனே படம் காட்டுவதற்காக அன்று’

Editorial   / 2018 மார்ச் 13 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னைச் சந்திப்பதற்கு, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ள முடிவை நியாயப்படுத்தியுள்ள ஐ.அமெரிக்க அதிகாரிகள், வெறுமனே படம் காட்டுவதற்காகவோ அல்லது வடகொரியாவுக்கான பரிசாகவோ, இச்சந்திப்பு இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டனர்.

“வெறுமனே படம் காட்டுவதற்காக, ஜனாதிபதி ட்ரம்ப், இதைச் செய்யவில்லை. அவர், பிரச்சினைகளைத் தீர்க்கப் போகிறார்” என, மத்திய புலனாய்வு முகவராண்மையின் (சி.ஐ.ஏ) பணிப்பாளர் மைக் பொம்பியோ, தொலைக்காட்சியொன்றுக்குத் தெரிவித்தார்.

இச்சந்திப்பு இடம்பெறும் வரை, தனது அணுவாயுத, ஏவுகணைச் சோதனைகள் அனைத்தையும், வடகொரியா நிறுத்துமென ஐ.அமெரிக்கா எதிர்பார்ப்பதாக, மைக் பொம்பியோவும், திறைசேரிச் செயலாளர் ஸ்டீவன் மினூச்சினும் குறிப்பிட்டனர்.

வடகொரியாவை அணுவாயுதமற்ற நாடாக மாற்றுவது தான், இச்சந்திப்பின் இலக்காக உள்ளது எனத் தெரிவித்த பொம்பியோ, அது சம்பந்தமாகக் கலந்துரையாடுவதற்கு, வடகொரியத் தலைவரும் இணங்கியுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

ஆனால், பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, தனது சோதனைகளை நிறுத்த வேண்டுமென, வடகொரியாவிடம் எதிர்பார்க்கப்படுகிறது என ஐ.அமெரிக்கா தெரிவிக்கின்ற போதிலும், பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, ஐ.அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள், வழக்கம் போலத் தொடருமெனவும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டு நாட்டுத் தலைவர்களும் சந்திப்பதற்கு, ஐ.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அவ்வாறான சந்திப்பு இடம்பெற்றால், ஐ.அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருக்கும் போதே, வடகொரியத் தலைவர் ஒருவரைச் சந்தித்த முதலாவது நபராக, ஜனாதிபதி ட்ரம்ப் மாறுவார்.

இச்சந்திப்புக்கான நேரம், திகதி என்பன இன்னமும் குறிக்கப்படாத போதிலும், பேச்சுவார்த்தை இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளது என்பதே, அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இரு தலைவர்களும், ஒருவரையொருவர் பகிரங்கமாக விமர்சித்து வந்த நிலையில், இவர்களின் சந்திப்பு, எவ்வாறு அமையுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதேபோல், தனது தனிப்பட்ட அரசியல் நோக்கத்துக்காகவே, இச்சந்திப்பை மேற்கொள்ள ஜனாதிபதி ட்ரம்ப் சம்மதித்துள்ளார் எனவும், இதன் மூலமாகப் பிரச்சினைகள் தீராது எனவும், ஒரு தரப்பினர் குறிப்பிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .