2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஸ்டெர்லைட் தடைக்கெதிராக மேன்முறையீடு வருகிறது

Editorial   / 2018 மே 31 , மு.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு, தமிழ்நாட்டு அரசாங்கம் அரசாணை பிறப்பித்துள்ள நிலையில், சட்டரீதியாக அத்தடையை எதிர்கொள்வதற்கு, ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை நிறுவனமான வேதாந்தா நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

தூத்துக்குடியிலுள்ள செப்பு ஆலையான இவ்வாலையால், சூழல்ரீதியாகப் பாதிப்பு ஏற்படுகிறது எனத் தெரிவித்து, அதை மூட வேண்டுமென, 100 நாட்களாக தூத்துக்குடி மக்கள் நடத்திவந்த போராட்டம், இறுதியில் பொலிஸாரால் துப்பாக்கிச்சூடு நடத்தி அடக்கப்பட்டது. அதில், 13 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, இன்னும் பலர் காயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து எழுந்த மக்கள் எதிர்ப்பையடுத்து, ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை, தமிழ்நாடு அரசாங்கம் பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், ஆலையை மூடுவதற்கான காரணமெதனையும் அரசாங்கம் சுட்டிக் காட்டியிருக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டிய வேதாந்தா நிறுவனம், இந்தத் தடைக்கெதிரான தங்களது சட்ட நடவடிக்கையில், தங்களுக்கே அதிக வாய்ப்பிருப்பதாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால், 13 பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பான சர்ச்சையும் எதிர்ப்பும், தமிழகத்தில் தொடர்ந்து காணப்படும் நிலையில், தற்போதைய நிலையில் சட்ட நடவடிக்கையை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப் போவதில்லை என, அந்நிறுவனத்தின் தகவல் மூலங்களை மேற்கோள்காட்டி, றொய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, இது தொடர்பான எதிர்ப்புகள் குறைவடைந்த பின்னர், சட்ட நடவடிக்கை தொடங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X