2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

14ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு நாளை

Editorial   / 2017 ஜூலை 16 , பி.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம், எதிர்வரும் 25ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், நாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்கெடுப்பு, நாளை 17ஆம் திகதி, நாடுமுழுவதும் நடைபெறுகின்றது.  

இந்தத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி சார்பில், ராம்நாத் கோவிந்த்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில், முன்னாள் மக்களவைத் தலைவர் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக, எம்.பிகள், எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 4,852 பேர் வாக்களிக்கவுள்ளனர்.  

நாடாளுமன்ற வளாகம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும், நாளை காலை, 10 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை, வாக்கெடுப்பு நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன. வாக்குகள் எண்ணும் நடவடிக்கை, எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறும். இதையடுத்து, இந்தியாவின் 14ஆவது குடியரசுத் தலைவர், ராஷ்டிரபதி பவன் அலுவலகத்தில் வைத்து, எதிர்வரும் 25ஆம் திகதி, பதவியேற்றுக்கொள்வார்.  

இரண்டு வேட்பாளர்களுமே, ஒடுக்கப்பட்ட தலித் குழுமத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில், சாதிய அடிப்படையிலான பிரசாரங்கள், பெருமளவுக்கு இடம்பெற்றிருக்கவில்லை.

தற்போதுள்ள நிலைவரப்படி, பா.ஜ.கவின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், இலகுவாக வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணையகத்தின் படி, விகிதாசார தேர்தல் தொழில்நுட்பம் மற்றும் ஒற்றை பரிமாற்ற வாக்கு போன்றவை, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் இன்னும் விருத்தி செய்யப்படவுள்ளமையினால், இந்த வாக்கெடுப்பு, வாக்குச்சீட்டுகள் மூலமே நடைபெறவுள்ளது.  

இது தொடர்பாக ஏற்கனெவே அறிவித்தல் விடுத்திருந்த ​தலைமைத் தேர்தல் ஆணையாளர் சையத் நசிம் அஹ்மத் ஜெய்தி, வாக்குச்சீட்டுகள், அங்கிகரிக்கப்பட்ட இந்திய மொழியில் அமைக்கப்பட்டிருக்கும் என்றும், எந்தத் வேட்பாளரை தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களோ, அந்த வேட்பாளரின் பெயருக்கு எதிராக உள்ள விருப்ப வரிசை முறைக் கட்டத்தில், எண்ணால் எழுத வேண்டும் என்றும் அறிவித்திருந்தார்.  

இதற்காக, தேர்தல் ஆணையகத்தினால் வழங்கப்படும் சிறப்புப் பேனாக்களையே பயன்படுத்தல் வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

பெண்கள் குறைவு

நாட்டின் முதல் குடிமகனைத் தேர்வு செய்யப் போகும் எம்.பி, எம்.எல்.ஏக்கள் குறித்த ஆய்வு ஒன்றை, ஜனநாயக சீர்திருத்த கழகம் நடத்தியுள்ளது. இந்த ஆய்வுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, வாக்களிக்கவுள்ள 4,852 பேரில் 9 சதவீதம், அதாவது 451 பேர் மட்டுமே, பெண்களாக உள்ளனர். கீழவையில், 65 பெண் எம்.பிக்களும் மேலவையில் 23 பெண் எம்.பிக்களும், நாடு முழுவதும் 363 பெண் எம்.எல்.ஏக்களும் உள்ளனர். உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம் மற்றும் மத்தியப் பிரதேசத்திலேயே அதிக பெண் எம்.பி, எம்.எல்.ஏக்கள் உள்ளனர். நாகாலாந்தில், ஒரு பெண் எம்.பியோ, எம்.எல்.ஏவோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.  

குற்றவியல் வழக்குகள்

இந்தத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள எம்.பி, எம்.எல்.ஏக்களில், 33 சதவீதமானவர்கள், அதாவது 1,581 பேர் மீது, குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில், 34 சதவீதமனவர்கள், கீழவை எம்.பிக்கள், 19 சதவீதமானவர்கள் மேலவை எம்.பிக்கள், 33 சதவீதமானவர்கள் எம்.எல்.ஏக்கள் ஆவர். 20 சதவீதமான எம்.பிக்கள், மிக கடுமையான குற்றவியல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். 4,852 எம்.பி,
எம்.எல்.ஏக்களில், 75 சதவீதமானவர்கள், அதாவது 3,460 பேர், கோடீஸ்வரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகவல்கள், அவர்கள் தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் பெறப்பட்டவை ஆகும்.  

கருணாநிதி வருகை

அரசியல் நிகழ்வுக்காக 11 மாதங்களுக்குப் பின்னர், தி.மு.க தலைவர் கருணாநிதி, வீட்டிலிருந்து வெளியேவரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தி.மு.க தலைவர் கருணாநிதி, உடல் நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வரும் அவரை, கட்சியினர் யாரும் சந்திக்க அனுமதி அளிக்கவில்லை.  

சுமார் 11 மாதங்களுக்கு பின்னர், அவர் மீண்டும், அரசியல் நிகழ்வுக்குத் திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .