2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கிழக்கில் பெண்களில் சம்பியனாக திருகோணமலை; ஆண்களில் அம்பாறை

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 12 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ், ரீ.கே.றஹ்மத்துல்லா

42ஆவது தேசிய விளையாட்டு விழாவிற்கு கிழக்கு மாகாண அணியைத் தெரிவு செய்வதற்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது, அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த வாரயிறுதியில் இடம்பெற்றது.

இதில் அம்பாறை, மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த ஆண், பெண் கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டன. இதில், ஆண்கள் பிரிவில் அம்பாறை மாவட்டமும் பெண்கள் பிரிவில் திருகோணமலை மாவட்டமும் முதலாமிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தினைப் பெற்றுக்கொண்டார்கள்.

இந்நிகழ்வின், ஆரம்ப வைபவத்திற்கு கிழக்கு மாகாண விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் என்.மதிவண்ணன் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் வீரா்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இறுதிப்போட்டி நிகழ்வுகளில் திருகோணமலை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எச்.விமலசேன, அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்வரன், அம்பாறை மாவட்ட கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் சிதத் லியனாராச்சி, பயிற்றுவிப்பாளர்களான எம்.ஐ.அமீர் அலி, எ.சப்றி நஸார், அக்கரைப்பற்று பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

பெண்களுக்கான போட்டி அணிக்கு ஆறு பேர், ஐந்து ஓவர்களைக் கொண்டதாகவும், ஆண்களுக்கான போட்டி  அணிக்கு 11 பேர் 15 ஓவர்களைக் கொண்டதாகவும் அமைந்திருந்தது.

பெண்களுக்கான இறுதிப் போட்டியில், திருகோணமலை மாவட்ட அணியும் மட்டக்களப்பு மாவட்ட அணியும் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய திருகோணமலை மாவட்ட அணி ஐந்து ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 62 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மடட்டக்களப்பு மாவட்ட அணி ஐந்து  ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 44 ஓட்டங்களைப் பெற்று 18 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், திருகோணமலை மாவட்ட அணியும், அம்பாறை மாவட்ட அணியும் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய திருகோணமலை மாவட்ட அணி 15 ஓவர்கல் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றது.  இதில் ஹூஸைன் 24, எஸ்.றூபன் 20, எம்.சனூஸ் 20 ஓட்டங்கள் முறையே பெற்றனர். 

பதிலுக்கு 133 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய அம்பாறை மாவட்ட அணி 14.1 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. இதில்  சிபான் 43 ஓட்டங்களையும் சாஸீர் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்த வெற்றிகளின் அடிப்படையில் பெண்கள் பிரிவில் திருகோணமலை மாவட்ட அணியும், ஆண்கள் பிரிவில் அம்பாறை மாவட்ட அணியும் கிழக்கு மாகாணம் சார்பாக தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொள்ளவுள்ளதாக அக்கரைப்பற்று பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத் தெரிவித்தார்.

42ஆவது தேசிய விளையாட்டு விழா இம்முறை யாழ்ப்பாணத்தில் இடம்பெறுவதுடன், கிரிக்கெட் போட்டிகள் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X