2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாவாந்துறை சென். மேரிஸ் சம்பியனானது

Gopikrishna Kanagalingam   / 2015 செப்டெம்பர் 27 , பி.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஸ்ரீ. கோபிநாத்
வடமாகாண ரீதியாக வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் நடாத்தி வந்த வடமாகாண வல்லவன் கால்பந்தாட்டத் தொடரின் சம்பியனாக, நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் தெரிவாகியுள்ளது. மன்னார் கில்லரி விளையாட்டுக் கழகத்தை இறுதிப் போட்டியில் தோற்கடித்தே, நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனானது. 
ஆயிரக்கணக்கான இரசிகர்கள் முன்னிலையில் வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில், இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் இல்லை என்றவாறு விட்டுக்கொடுக்காமல், போட்டியின் ஆரம்பத்திலிருந்தே விறுவிறுப்பாக விளையாடியதால் முதற்பாதி முடிவில் இரு அணிகளும் கோலெதனையும் பெறவில்லை. 
இந்நிலையில், இரண்டாவது பாதி ஆரம்பித்து 58ஆவது நிமிடத்தில் மன்னார் கில்லரி அணியின் நட்சத்திர வீரர் ரஞ்சன் தனது அணிக்காகக் கோலொன்றினைப் பெற்று, தனது அணியை முன்னிலை பெற வைத்தார். இதன் பிற்பாடு, இரு அணிகளும் கோலெதனையும் பெறாததால், கில்லரி அணியே சம்பியனாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டம் முடிவடைய ஒரு நிமிடம் இருக்கையில், 89வது நிமிடத்தில், நாவாந்துறை சென். மேரிஸ் வீரர் ஜக்சன் ஒரு கோலினைப் பெற ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. 
இதனையடுத்து, சம்பியனைத் தீர்மானிக்க இடம்பெற்ற தண்ட உதையில் 5-4 என்ற கோல் கணக்கில் நாவாந்துறை சென். மேரிஸ் அணி வெற்றி பெற்றுச் சம்பியனானது. அவ்வணிக்கு இரண்டு இலட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்ற மன்னார் கில்லரி அணிக்கு ஒரு இலட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்கப்பட்டது. இறுதிப்போட்டியின் நாயகனாகத் தெரிவு செய்யப்பட்ட சென். மேரிஸ் அணி வீரர் ஜக்சனுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டதுடன், ஏழு கோல்களைப் பெற்ற மன்னார் கில்லரி அணி வீரர் ரஞ்சன், தொடரின் நாயகனானத் தெரிவாகி, 25,000 ரூபாய் பணப்பரிசில் வழங்கப்பட்டது. 
தவிர, தொடரின் வளர்ந்து வரும் வீரராக தெரிவு செய்யப்பட்ட வல்வெட்டித்துறை ஆதிசக்தி விளையாட்டுக் கழகத்தின் வீரர் கௌரிதர்சனுக்கு 5,000 ரூபாய் பணப்பரிசிலும், தொடரின் சிறந்த கோல்காப்பாளராகத் தெரிவு செய்யப்பட்ட மன்னார் கில்லரி விளையாட்டுக் கழகத்தின் சரத்பாபுவுக்கு 5,000 ரூபாய் பணப்பரிசிலும், தொடரின் சிறந்த நன்னடத்தையைப் பேணிய அணியாக மன்னார் கில்லரி அணிக்கு 5,000 ரூபாய் பணப்பரிசிலும், மக்களின் மனம் கவர்ந்த வீரராக மன்னார் சென். ஜோசப் அணியின் டிக்கோனிங்க்கு சைக்கிளும் கிண்ணமும் வழங்கப்பட்டிருந்தது. 
தவிர, அரையிறுதிக்குத் தகுதி பெற்ற நாவாந்துறை சென். மேரிஸ், மன்னார் கில்லரி, மன்னார் சென். லூசியஸ், வல்வெட்டித்துறை ஆதிசக்தி அணிகளுக்கு புலம்பெயர் கழுகுகள் விளையாட்டுக் கழகம் சார்பாக தலா 15,000 ரூபாயும் வழங்கப்பட்டிருந்தது. மேலும், சுப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்ற பலாலி விண்மீன், மயிலங்காடு ஞானமுருகன், மன்னார் சென். ஜோசப், அந்தோணியார்புரம் சென். அன்ரனீஸ் ஆகிய அணிகளுக்குத் தலா 10,000 ரூபாய் வழங்கப்பட்டிருந்தது. 
இதேவேளை, வியாழக்கிழமை (24) வல்வெட்டித்துறை ஆதிசக்தி விளையாட்டுக் கழகத்துக்கும் மன்னார் சென். லூசியஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் இடையே இடம்பெற்ற மூன்றாமிடத்துக்கான போட்டியில் மன்னார் சென். லூசியஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது. 
போட்டியின் 41ஆவது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பினை சென். லூசியஸ் வீரர் யூலி கோலாக மாற்றி முதலாவது கோலினை பதிவுசெய்தார். முதற்பாதி ஆட்டம் 1-0 என முடிவடைய இரண்டாவது பாதி ஆட்டத்தின் 38ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற தண்ட உதையினை சென். லூசியஸ் வீரர் பிராங்கிளின் கோலாக மாற்ற, 2-0 என முன்னிலை பெற சென். லூசியஸ் அணியின் பக்கம் போட்டியின் வெற்றி சாய தொடங்கியது. போட்டியின் நிறைவுக்கு 05 நிமிடம் மீதமிருக்க ஆதிசக்திக்கு கிடைத்த தண்ட உதையினை சென்.லூசியஸ் கோல் காப்பாளர் இலாவகமாகத் தடுத்ததன் மூலம் கோல் பெறும் அரிய வாய்ப்பினை ஆதிசக்தி இழக்க ஆட்ட நேர முடிவில் 2:0 என மன்னார் மன்னார் சென். லூசியஸ் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தினை தனதாக்கிக் கொண்டது. அவ்வணிக்கு ஐம்பது ஆயிரம் ரூபாய் பணப்பரிசு வழங்கப்பட்டிருந்தது. நான்காமிடம் பெற்ற வல்வெட்டித்துறை ஆதிசக்தி அணிக்கு 25,000 ரூபாய் பணப்பரிசில் வழங்கப்பட்டிருந்தது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X