2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சம்பியனானது புத்தளம் தில்லையடி நியூ ஃபிரண்ட்ஸ்

எம்.யூ.எம். சனூன்   / 2019 ஜூலை 10 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் கால்பந்தாட்ட லீக் நடாத்திய குறுகிய கால கால்பந்தாட்ட தொடரான சிற்றி ஃபார்தர் வெற்றிக் கிண்ணத் தொடரில் புத்தளம் தில்லையடி நியூ ஃபிரண்ட்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

புத்தளம் மாவட்ட விளையாட்டரங்கு தொகுதியில் அண்மையில் நடைபெற்ற விலகல் முறையில் இடம்பெற்ற 11 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் புத்தளம் விம்பிள்டன் விளையாட்டுக் கழகத்தை வென்றே நியூ ஃபிரண்ட்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

இப்போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களில் விம்பிள்டன் விளையாட்டுக் கழகத்தின் முன்கள வீரர் ஏ.எம். பாக்கீர் தனது அணிக்கான முதலாவது கோலைப் பெற்றார். எனினும் இடைவேளைக்கு முன்பாகவே நியூ ப்ரண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் முன்கள வீரர்களான பர்மான் 2 கோல்களையும், அருண் ஒரு கோலையும் பெற இடைவேளையின்போது 3-1 என்ற கோல் கணக்கில் நியூ ஃபிரண்ட்ஸ் முன்னிலை வகித்தது.

இடைவேளைக்கு பின்னர் இரண்டு அணிகளும் கோல்களை செலுத்த முயற்சித்த போதிலும் அது கைகூடாமல் போனதால் இறுதியில் நியூ ஃபிரண்ட்ஸ் விளையாட்டுக் கழகம் 3-1 என்ற கோல் கணக்கில் வென்று சம்பியனாகியது.

இறுதிப் ஓட்டியின் நாயகனாக நியூ ஃப்ரண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் எம். ஜஹீரும், சிறந்த கோல் காப்பாளராக அதே கழகத்தின் எம். ரிகாசும் தெரிவாகினர். 

இப்போட்டிக்கு மத்தியஸ்தர்களாக எம்.ஐ.எம். அலி, ஏ.ஓ. அஸாம், ஏ.ஏ. கியாஸ், எம்.எம். ஷிபான் ஆகியோர் கடமையாற்றியதோடு போட்டி மேற்பார்வையாளராக லீக் உதவி செயலாளர் டி.எம். ரினாஸ் கடமையாற்றினார்.

புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் இத்தொடருக்கு பூரண அனுசரணை வழங்கி இருந்ததோடு அவரே இறுதி போட்டியின் போது பிரதம அதிதியாகவும் கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தார்.

சம்பியனான நியூ ஃபிரண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு 30,000 ரூபாய் ரொக்கப்பணத்துடன் வெற்றிக் கிண்ணமும், இரண்டாமிடம் பெற்ற விம்பிள்டன் விளையாட்டுக் கழகத்துக்கு 20,000 ரூபாய் ரொக்கப்பணத்துடன் வெற்றிக் கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டன.

புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸின் அயராத முயற்சியின் பலனாக புத்தளம் மாவட்ட விளையாட்டரங்க தொகுதி திறந்து வைக்கப்பட்ட பின்பு நடைபெற்ற முதலாவதான இந்த இறுதி நிகழ்வுகள், மாதிரி சர்வதேச கால்பந்தாட்ட ஆரம்ப நிகழ்வுகளை போன்று அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .