2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சம்பியனானது மயிலங்காடு ஞானமுருகன்

குணசேகரன் சுரேன்   / 2018 ஏப்ரல் 29 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய விடியல் கால்பந்தாட்டத் தொடரில், மயிலங்காடு ஞானமுருகன் அணி சம்பியனாகியுள்ளது.

யாழ்ப்பாணம், வலிகாமம், தீவகம், பருத்தித்துறை, வடமராட்சி ஆகிய லீக்குகளின் அனுமதியுடன் யாழ். மாவட்ட கால்பந்தாட்ட கழகங்களுக்கிடையில் நடைபெற்ற இத்தொடரில் 39 அணிகள் பங்குபற்றுயிருந்தன.

முதற்சுற்றுப் போட்டிகள் விலகல் முறையில் நடைபெற்று, ஞானமுருகன், புங்குடுதீவு நசரேத், குருநகர் பாடுமீன், அரியாலை ஐக்கியம், இளவாலை யங்ஹென்றிஸ், குப்பிளான் குறிஞ்சிக்குமரன், ஊரெழு றோயல், நவிண்டில் கலைமதி ஆகிய அணிகள் காலிறுதிப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றன.

தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப் போட்டிகளிலிருந்து ஞானமுருகன், பாடுமீன், றோயல், இளவாலை யங்ஹென்றிஸ் அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றன.

அரையிறுதிப் போட்டிகளில், பாடுமீன் அணி, 4-3 என்ற கோல் கணக்கில் றோயல் அணியையும் ஞானமுருகன் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் யங்ஹென்றிஸ் அணியையும் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றன.

அந்தவகையில், இத்தொடரில் ஐந்து தடவைகள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த பாடுமீன் அணியும், நடப்புச் சம்பியனாகிய ஞானமுருகன் அணியும் இவ்வாண்டுக்கான இறுதிப் போட்டியில் சந்தித்தன. இறுதிப் போட்டி, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றிரவு மைதானம் நிறைந்த இரசிகர்களின் ஆர்ப்பரிக்கும் சத்தத்தின் நடுவில் நடைபெற்றது.

போட்டி ஆரம்பமாகி முதலாவது நிமிடத்திலேயே ஞானமுருகன் அணிக்கு அடுத்தடுத்து இரண்டு மூலையுதைகள் கிடைத்தன. எனினும் அதில் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. பாடுமீன் அணியின் 12ஆம் இலக்க வீரருக்கு அருமையான கோல் பெறும் சந்தர்ப்பங்கள் மூன்று அடுத்தடுத்துக் கிடைத்தும் அவற்றை அவர் வீணாக்கினார். 13 ஆவது நிமிடத்தில் ஞானமுருகன் அணியின் கோல் காப்பாளர் ஏதேச்சையாக பலமாக அடிபட்டு மைதானத்தைவிட்டு வெளியேறினார். இதற்கு காரணமான பாடுமீன் அணியின் வீரருக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. மீண்டும் 21ஆவது நிமிடத்தில் பாடுமீன் அணியின் இன்னொரு வீரருக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.

32 ஆவது நிமிடத்தில் ஞானமுருகன் அணிக்கு கோல் பெறும் மிகமிக இலகுவான சந்தர்ப்பம் கிடைத்தபோதும் அதை 19 இலக்க வீரர் வெளியே செலுத்தி வீணாக்கினார். இரண்டு தரப்பினரும், கோல் பெறும் சந்தர்ப்பங்களை வீணாக்கினர். இந்நிலையில் போட்டியின் 45ஆவது நிமிடத்தில் பாடுமீன் அணியின் கீதன் கோல் கம்பத்தின் இடது பக்கமாகவிருந்து, அருமையான கோலொன்றைப் பெற்றார். முதற்பாதி அக்கோலுடன் முடிவுக்கு வந்தது.

இரண்டாம் பாதி ஞானமுருகன் அணிக்கு சாதகமாக இருந்தது. அவ்வணியினர் மேலேறி வந்து தாக்குதல் நடத்தினர். அடுத்தடுத்து கோல் பெறும் பல சந்தர்ப்பங்களை ஞானமுருகன் அணி ஏற்படுத்தியபோதும் அவற்றை கோலாக மாற்றத் தவறினர். இரண்டாவது பாதியின் 12ஆவது நிமிடத்தில் பாடுமீன் அணிக்கு கிடைத்த மிகமிக இலகுவான சந்தர்ப்பத்தை அவ்வணியின் 12ஆம் இலக்க வீரர் வீணாக்கினார். அதேபோல்ல் 14 ஆவது நிமிடத்தில் கோல் காப்பாளர் வீழ்ந்தமையால் கிடைத்த வாய்ப்பை ஞானமுருகன் அணியின், தலைவர் ஜெகதீஸ் வீணாக்கினார்.

23 ஆவது நிமிடத்தில் ஜெகதீஸ் கொடுத்து நேரான பந்தை, அப்படியே கோல் கம்பத்துக்குள் சசிக்குமார் கனுஜன் புகுத்த கோலெண்ணிக்கை சமமானது. அக்கோலுடன் உற்சாகமடைந்த ஞானமுருகன் அணியினர், மேலும் முன்னேறி பாடுமீன் அணிக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். இதனால், பாடுமீன் அணியினர் மேலதிக கோல் அடிக்கும் முனைப்பைக் கைவிட்டு, தடுப்பாட்டத்தைக் மேற்கொண்டனர். 44 ஆவது நிமிடத்தில் ஞானமுருகன் அணி கோல் கம்பத்துக்குள் பந்தைச் செலுத்தியபோதும் அது ஓவ் சைட்டில் இருந்து பெறப்பட்ட கோல் என மத்தியஸ்தர் நிராகரித்தார். அந்தவகையில், போட்டியின் வழமையான நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் போட்டி காணப்பட்டது.

இந்நிலையில், வெற்றியாளரைத் தீர்மானிக்க மேலும் 15 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதில், ஞானமுருகன் அணியினருக்கு பெனால்டி வாய்ப்பொன்று கிடைத்தது. அதனைச் சாதகமாகப் பயன்படுத்திய ஞானமுருகன் அணியினர், அதைக் கோலாக மாற்றினர். ரவீந்திரன் பார்த்தீபன் அதைக் கோலாக மாற்றினார். முடிவில், ஞானமுருகன் அணி, 2-1 என்ற கோல் கணக்கில் வென்று சம்பியனாகி, தொடர்ந்து இரண்டாவது தடவையாக புதிய விடியல் வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இத்தொடரின் நாயகனாக பாடுமீன் அணியின் கீதனும் சிறந்த கோல் காப்பாளராக ஞானமுருகன் அணியின் அருளானந்தம் பிருந்தாபனும் தெரிவாகினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .