2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜி.பி.எல் - கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு ஊக்கசக்தி

குணசேகரன் சுரேன்   / 2019 ஜூன் 07 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய உள்ளூர்க் கழகங்களுக்கிடையிலான பிக் பாஷ், இந்தியன் பிறீமியர் லீக் உள்ளிட்ட பல தொடர்கள் சர்வதேச ரீதியில் பிரபலம் பெற்று, வீரர்களும் அதனை நோக்கி நகர்ந்து வருகின்றனர். ஏற்கெனவே சம்பள அடிப்படையில் நாட்டுக்காக விளையாடிய வீரர்களுக்கு இது மேலும் ஊக்கமளித்தது. இலங்கையிலும் இலங்கை ஶ்ரீ லங்கா பிறீமியர் லீக் என்று ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையில், கொழும்பு மற்றும் மேல், மத்திய மாகாணங்களைச் சேர்ந்த கழகங்களின் வீரர்கள் சம்பள அடிப்படையில் கழகங்கள் சார்பாக, போட்டிகளில் பங்குபற்றி வருகின்றனர். அவர்களுக்கு தொழில்முறையான விளையாட்டாக கிரிக்கெட் காணப்படுகின்றது.

இருந்தும், வடக்கில் யாழ்ப்பாணத்தில் அவ்வாறு இல்லை. கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆர்வம், தங்களின் திறமையை வெளிகாட்ட வேண்டும் என்ற எண்ணம் என்பனவற்றால் எவ்வித சம்பளங்களோ கொடுப்பனவுகளோயின்றி கழகங்கள் சார்பில் வீரர்கள் போட்டிகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம் கிரிக்கெட் சங்கத்தின் கீழ், பதிவு செய்யப்பட்டு 26 விளையாட்டுக் கழகங்கள் உள்ளன. அனைத்து கழகங்களின் வீரர்களும் எந்தவித கொடுப்பனவுமின்றி கிரிக்கெட் ஆடி வருகின்றனர்.

தாங்கள் விளையாடிவரும் கழகங்கள் வெற்றிகள் பெற்று, சம்பியனாகும்போது கிடைக்கும் பணப்பரிசிலில் சிறு பங்கு வீரர்களுக்கு கிடைக்கும். இருந்தும் அவற்றை எதிர்பார்த்து வீரர்கள் விளையாடுவது கிடையாது. முழுக்க முழுக்க தங்களின் கிரிக்கெட் திறனை வளர்க்கவும், தங்களை கிரிக்கெட்டில் ஒருநபராக நிலைநாட்டவும் விளையாடி வருகின்றனர். கழகங்களை கொண்டு நடத்துவதற்கு கூட அனுசரணையாளர் இல்லாமல் பல கழகங்கள், பந்து வாங்க, துடுப்புமட்டை வாங்க முடியாமல் திண்டாடுகின்றன. வடக்கின் கிரிக்கெட்டில் இதுவொரு சாபக்கேடு என்றே சொல்லாம்.

இதற்கு பல பலமான காரணிகள் உள்ளன. யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் ரசிர்கள் அதிகளவில் இருந்தாலும், யாழ்ப்பாணத்தில் கால்பந்தாட்ட ரசிகர்கள் போட்டிகளைப் பார்வையிடுவதற்கு கொடுக்கும் ஆதரவை கிரிக்கெட் ரசிகர்கள் கொடுப்பது கிடையாது. ஒரு கால்பந்தாட்டப் போட்டிக்கு குறைந்தபட்சம் 2,000 ரசிகர்களை அனுமதிச்சீட்டு கட்டணம் அறவிட்டும் வரவைக்கலாம். ஆனால், இலவசமாக கிரிக்கெட் பார்க்க 10 பேர் கூட வருவது கிடையாது.

இப்படி தங்களுக்கான ஆதரவுகள் குறைந்திருக்க நிலையில், யாழ்ப்பாண வீரர்களுக்கு கிடைத்துள்ள ஒரு உற்சாகமான வரவேற்பு தான் தொழில்முறையிலான கிரிக்கெட்.

கிறாஸ்கொப்பர்ஸ் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்படும், கிறாஸ்கொப்பர்ஸ் பிறீமியர் லீக் (ஜி.பி.எல்), வீரர்களை ஏலம் எடுத்து அணிகள் உருவாக்கி நடத்தப்படும் முதலாவது கிரிக்கெட் தொடர் ஆகும். இது 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

அதன் பின்னர் யாழ்ப்பாண மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் சுப்பர் லீக் இருபதுக்கு - 20 போட்டிகள் கடந்தாண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிறாஸ்கொப்பர்ஸ் விளையாட்டுக் கழகம், றொகான் - சங்கர் ஞாபகார்த்தமாக இத்தொடரை 2016ஆம் ஆண்டு முதல் ஆரம்பித்தது. ஏழு பேர் பங்குபற்றும் ஐந்து ஓவர்கள் கொண்ட வன்பந்தாட்ட கிரிக்கெட் தொடராக இது ஆரம்பிக்கப்பட்டு, இன்று நான்காவது வருடமாக வெற்றிகரமாக நடத்தப்படுகின்றது. 6 அணிகள் அந்த அணிகள் ஒவ்வொன்றுக்கும் உரிமையாளர்கள்.

யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களின் வீரர்களிடமிருந்து, ஒரு காலப் பகுதியில் விண்ணப்பம் கோரப்படும். விண்ணப்பிக்கும் வீரர்கள் தொடர்பில் பட்டியல் தயாரிக்கப்பட்டு, வீரர்கள் ஏலமிடப்படுவார்கள். இதன்போது, அணிகளின் உரிமையாளர்கள் கலந்துகொண்டு ஏலமெடுப்பார்கள்.

ஒரு வீரர் ஒருவருக்கு ஆகக்குறைந்த ஏலமெடுக்கும் தொகை 5,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கும். அத்தொகையிலிருந்தே ஏலத்தொகையானது எப்போதும் ஆரம்பிக்கும். ஒவ்வொரு அணியும் தலா ஒரு வீரரை முன்னரே ஒப்பந்தம் செய்து தக்க வைத்துக்கொள்ள முடியும். அதனை அந்த அணியின் உரிமையாளர், முகாமையாளர், பயிற்சியாளர்கள் இணைந்து தேர்வு செய்வார்கள். ஒரு அணிக்குத் தேவையான மிகுதி எட்டு வீரர்களும் ஏலம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆரம்ப இரண்டு ஆண்டுகளும் அணிக்கு மொத்தமாகவே எட்டு வீரர்கள் தான் தேர்வு செய்யப்பட்டு, கடந்தாண்டு ஒன்பதாக மாற்றப்பட்டு பின்னர் தற்போது 10 வீரர்களாக கூட்டப்பட்டுள்ளது.

ஏலமெடுக்கும் தொகையில், 75 சதவீதம் வீரர்களுக்கு கொடுக்கப்படும். மிகுதி 25 வீதமானது சமூக நலத்திட்டத்துக்காக செலவிடப்படும். இதன்மூலம் கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கான பெறுமதியை மதிப்பிட்டுக்கொள்ளவும், மேலும் நற்பணியில் ஈடுபடவும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

ஏலத்தில் அதிகூடிய தொகைக்கு எடுக்கப்படும் வீரர் பொதுவாக உயர்ந்த நிலையில் பார்க்கப்படுவார். அந்தக் காலப் பகுதியில் அவருடைய பெறுபேறுகள், அவர் தொடர்பிலான அபிப்பிராயங்கள், வீரர்களுடன் இணங்கிச் செயற்படும் விதம் என்பவற்றுடன் முக்கியம் வகிப்பது அதிரடித் துடுப்பாட்டம்.

 

எம்மத்தியில் கொண்டாடப்படவேண்டிய வீரர்கள் பலர் உள்ளனர். கிரிதரன் மதுசன். இவரது துடுப்பாட்டப் பாணியே வித்தியாசம். மைதானத்துடன் பந்து செல்லும் விளையாடுவதில் கலைதேர்ந்தவர். இவருடைய ஆட்டத்தைப் பார்க்க சிறப்பாக இருக்கும்.

செல்ரன், ஜெயரூபன், ஜனோசன், ஜெரிக், சஞ்சயன், ஜனுதாஸ், ஜேம்ஸ் ஜான்சன், பானுஜன், சத்தியன், வாமணன், கல்கோவன், துவாரகசீலன், எஸ்.மதுசன், நிரோசன், ஸ்ரீகுகன், வினோத், சந்தோஸ், மொனிக் நிதுசன், ஜனந்தன், இராகுலன், ஆதித்தன், மோகன்ராஜ், சுரேந்திரன், சுஜாந்தன் என பல வீரர்கள் கொட்டிக் கிடக்கின்றனர். அவர்களிடம் தனித்திறமையான திறமைகள் நிறையவுள்ளன. அவர்களின் ஆட்டங்கள் சிறப்பானவை. ஜி.பி.எல். போன்ற தொழில்முறையை நாடும் கிரிக்கெட்டே அவர்களை வளர்க்கும். கிரிக்கெட்டில் அவர்களின் பங்கும், அவர்களின் திறன்களும் அதிகரித்தே செல்லும். வருங்காலத்திலும் பல வீரர்கள் ஆர்வத்துடன் கிரிக்கெட்டை நாடுவார்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .