2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது வடக்கின் 113ஆவது சமர்

குணசேகரன் சுரேன்   / 2019 மார்ச் 10 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் விஜயகாந்த் வியாஸ்காந், அணித்தலைவர் செல்வராசா மதுசன் ஆகியோரின் பந்துவீச்சு, மதுசனின் அதிரடியான அரைச்சதம் என்பன கைகொடுக்க வடக்கின் 113ஆவது சமரானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்குமிடையே, மத்திய கல்லூரி மைதானத்தில், கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட சென். ஜோன்ஸ் கல்லூரி, மத்திய கல்லூரியின் வேகப்பந்துவீச்சாளர் கமலராசா இயலரசனின் ஆக்ரோஷனுக்கு மத்தியிலும் 11ஆம் இலக்கத் துடுப்பாட்டவீரர் அன்ரன் செல்வதாஸ் சரணின் ஒத்துழைப்புடன் தெய்வேந்திரம் டினோஷன் பெற்ற அபாரமான 98 ஓட்டங்களுடன் தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், இயலரசன் 5, வியாஸ்காந்த் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி, இயலரசனின் அரைச்சதம், வியாஸ்காந்தின் பங்களிப்பைத் தவிர விக்கெட்டுகளை விரைவாக இழந்ததால் சகல விக்கெட்டுகளையும் இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், இயலரசன் 77, வியாஸ்காந்த் 41 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சரண் 3, டினோசன், மகேந்திரம் ஹேமதுசாந்த், எல்சன் டேனுசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கைப்பற்றினர்.

இந்நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸினை துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு, அதன் ஆரப்பத் துடுப்பாட்ட வீரர்களான நாகேந்திரராஜா சௌமியன் (50), கிறிஸ்ரி பிரசன்னா தனுஜன் (66) ஆகியோர் தமக்கிடையே சத இணைப்பாட்டத்தை பகர்ந்து, வடக்கின் சமரில் 1990ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டிருந்த ஆரம்ப விக்கெட்டுக்கான அதிகமான 111 ஓட்டங்கள் என்ற சாதனையை தகர்த்து 121 ஓட்டங்களைப் பகர்ந்திருந்தனர்.

பின்னர், அரைச்சதங்களை இவர்கள் இருவரும் கடந்த நிலையில், இவர்களிருவரினது விக்கெட்டுகளை மதுசன் கைப்பற்றியதோடு, மதுசனும் வியாஸ்காந்தும் தொடர்ந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நிலையில், டினோசனின் 24, அன்ரன் அபிசேக்கின் ஆட்டமிழக்காத 31 ஓட்டங்களோடு, 9 விக்கெட் இழப்புக்கு 245 ஓட்டங்களைப் பெற்றபோது தமது இனிங்ஸை சென். ஜோன்ஸ் கல்லூரி இடைநிறுத்தியது. பந்துவீச்சில், வியாஸ்காந்த் 4, செல்வராசா மதுசன் 3 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தனர்.

அந்தவகையில், 232 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி, 36 பந்துகளில், நான்கு 6 ஓட்டங்கள், 4 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக மதுசன் பெற்ற 65 ஓட்டங்களுடன், 7 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது. பந்துவீச்சில், அணித்தலைவர் அபினாஸ் முர்பின் 2, டினோசன், அபிசேக், சரண் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகன், சிறந்த பந்துவீச்சாளராக வியாஸ்காந், சிறந்த துடுப்பாட்டவீரராக டினோசன், சிறந்த விக்கெட் காப்பாளராக சென். ஜோன்ஸின் கமலபாலன் சபேசனும், சிறந்த சகலதுறைவீரராக இயலரசன், சிறந்த களத்தடுப்பாளராக சென். ஜோன்ஸின் தியாகராஜா வினோஜன் ஆகியோர் தெரிவாகினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X