2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பாதிக்கப்பட்ட மக்களுக்கு என் பாடலினால் சிறிய ஆறுதல் கொடுத்தேன்: ரி.எம்.கிருஷ்ணா

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 06 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு கர்நாடக இசை மூலமாக ஒரு மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டுமென்றதொரு விருப்பம் இருந்தது. அவர்கள் தங்களது கவலையை குறைந்தது இரண்டு, மூன்று மணிநேரமாவது மறக்க வேண்டும். இதற்காகவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இசைக்கச்சேரி பண்ண இணக்கம் தெரிவித்தேன். இது அந்த மக்களுக்கு நான் வழங்குகின்ற சின்னதொரு கடமையாகவே கருதுகிறேன் என சங்கீத வித்துவான் ரி.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

தமிழ்மிரருக்கு ரி.எம்.கிருஷ்ணா வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மேற்படி கூறினார். அவர் எங்களுடன் மனம் திறந்து பேசுகையில்...

எனது ஐந்தாவது வயதில் கர்நாடக இசை மீது ஏற்பட்ட ஆர்வத்தினால் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். எனது கர்நாடக இசைக்குரு சீத்தா ரமேஷ் சர்மா ஆவார். பின்னர், கர்நாடக சங்கீதத்தின் பெரிய ஜாம்பவனாகக் கருதப்படும் சண்முக ரிஷி அவர்களிடமும் நான் கர்நாடக இசையை கற்றுக்கொண்டேன். 

எனது குடும்பம் இசைப் பாரம்பரியத்தையுடைய குடும்பம் இல்லை. வர்த்தகத் துறையைச் சார்ந்த குடும்பமே எனது குடும்பம். இருப்பினும் எனது தாயார் நன்றாகப் பாடும் திறமையுடையவர் என்று மனதார கூறுகிறார் ரி.எம்.கிருஷ்ணா.

கர்நாடக இசைக்கச்சேரிக்காக ஏராளமான இடங்களுக்கு சென்ற கிருஷ்ணா, நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குவதற்காக இந்திய கலாசார நிலையத்தின் அழைப்பின் பேரில் இலங்கை வந்திருந்தார்.

வடக்கிலும் கொழும்பிலும் தனது இசையால் மக்களை கட்டிப்போட்ட ரி.எம்.கிருஷ்ணாவை தமிழ்மிரர் வாசகர்களுக்காக பேட்டி கண்டோம். அவர் வழங்கிய பிரத்தியே செவ்வியினை இங்கே முழுமையாக தருகின்றோம்.



கேள்வி:- இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா போன்ற பகுதிகளுக்குச் சென்று கர்நாடக இசைக்கச்சேரியை நடத்தியிருந்தீர்கள். அந்த அனுபவம் எப்படி இருக்கிறது?

பதில்:- யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா போன்ற பகுதிகளுக்குச் சென்ற எனக்கு அங்கு நிறைய விடயங்களைத் தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. பல இன்னல்களில் மத்தியில் அங்குள்ள மக்களுக்கு கச்சேரி மூலம் சிறியதொரு மகிழ்ச்சியையே என்னால் வழங்க முடிந்தது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா போன்ற பகுதிகளிலுள்ள மக்கள் முப்பது வருடகாலமாக நிலவிய யுத்தம் காரணமாக பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வந்துள்ளனர். அந்த நிலையிலும்கூட அம்மக்கள் கலை, கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சிறந்த முறையில் அவற்றை மிகவும் அழகாக பேணிப் பாதுகாத்து வந்துள்ளனர். இந்த மக்கள் கலை, கலாசாரம் மீது வைத்துள்ள ஆர்வம், ஊக்கம், மரியாதை ஆகியவற்றை நாம் அனைவரும் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். அங்குள்ள மக்கள் கலை, கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பேணிப் பாதுகாக்கும் முறையை நான் ஒரு கலைஞனாக இருந்தபோதிலும் பார்த்துக் கற்றுக்கொள்ள  வேண்டியவனாகவுள்ளேன். 

ஏனெனில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் சங்கீதத்தைப் பற்றியோ அல்லது மொழியைப் பற்றியோ கலையைப் பற்றியோ நான் சிந்தித்திருப்பேனா என்பது கேள்விக்குறியே. ஆனால் அந்த மக்கள் யுத்தத்திற்கு மத்தியிலும் கலையை உயிர்நாடியாகக் கொண்டு - சிந்தித்துக்கொண்டேதான் இருந்துள்ளார்கள். 

யாழ். குடாநாட்டில் கிட்டத்தட்ட மூன்று மணிநேரமாக எனது இசைக்கச்சேரி நடைபெற்றது. குடாநாட்டு மக்கள் எனது இசைக்கச்சேரியை மிகவும் நன்றாக ரசித்துக் கேட்டிருந்தார்கள். இசைக்கச்சேரி நடைபெற்ற யாழ். வீரசிங்க மண்டபமே அங்குள்ள மக்களால் நிறைந்து வழிந்தது.

அத்துடன், யாழ். மருதனார்மடத்திலுள்ள இராமநாதன் இசைக்கல்லூரிக்கும் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அக்கல்லூரியில் இசை, நடனம் ஆகிய துறைகளில்  கிட்டத்தட்ட இருநூறு மாணவர்கள் பயின்று வருகின்றனர். அந்த மாணவர்களுக்கு கர்நாடக இசை குறித்து விரிவுரை நிகழ்த்தியும், பாடியும் காட்டினேன். அவர்களுடனான சந்திப்பு எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இந்த மாதிரியானதொரு மனநிலையை நாம் எல்லோருமே வளர்த்துக்கொள்ள வேண்டும். எமது வாழ்க்கையும் சந்தோஷமாக கழியும்.

கிளிநொச்சியிலும் எனது இசைக்கச்சேரி நடைபெற்றது. அங்கு மக்களின் வருகை சற்றுக் குறைவாகவே காணப்பட்டது. இருப்பினும் எனது இசைக் கச்சேரிக்காக வந்த மக்கள் அனைவரும் கச்சேரியை மிகவும் ரசித்துக் கேட்டதை என்னால் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. வவுனியாவிலும் எனது இசைக்கச்சேரிக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மேற்படி பகுதிகளிலுள்ள மக்களுக்கு கர்நாடக இசை மூலமாக ஒரு மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டுமென்றதொரு விருப்பம் இருந்தது.  அவர்கள் தங்களது கவலையை குறைந்தது இரண்டு, மூன்று மணிநேரமாவது மறக்க வேண்டும். இதற்காகவே மேற்படி பகுதிகளில் இசைக்கச்சேரி பண்ண இணக்கம் தெரிவித்தேன். இது அந்த மக்களுக்கு நான் வழங்குகின்ற சின்னதொரு  கடமையேயாகும்.

மக்களுக்கு மகிழ்ச்சி கொடுப்பதற்கும் அவர்களது மனதிற்கு இதமளிப்பதற்காகவுமே கலைஞனொருவன் கச்சேரி பாடுவதும் நடனம் ஆடுவதுமான செயற்பாடுள்ளது. இந்த நிலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு இவ்வாறான மகிழ்ச்சியும் மனச்சாந்தியும் கட்டாயமாக வழங்கப்பட வேண்டியதொன்றாகும்.

என்னைப் போன்ற கலைஞர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று  கச்சேரிகளையோ அல்லது நடனங்களையோ அல்லது நாடகங்களையோ நடத்த வேண்டும். இதன் மூலம் அந்;த மக்களின் வாழ்க்கையில் தொலைந்த மகிழ்ச்சி மீண்டும் துளிர்விடனும். அதுவே எமக்கும் சந்தோஷம்.

இந்த மக்களுக்கு சிறியதொரு சந்தோஷத்தையே நான் வழங்கியுள்ளேன் என்ற சந்தோஷத்தில் நான் செல்கின்றேன்.



கேள்வி:- வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா போன்ற பகுதிகளுக்கு சென்று இசைக்கச்சேரியை நீங்கள் நடத்தியுள்ளீர்கள். முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கும் சென்றிருந்தீர்களா?
 
பதில்: முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள இடங்களைப்; பார்வையிட வேண்டுமென்பதற்காக  நான் அங்கு சென்றிருந்தேன். முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் யுத்தம் காரணமாக பெரிதும் கஷ்டங்களை அனுபவித்துள்ளனர். அந்த மக்கள் தங்களது கஷ்டத்திலிருந்து மீண்டு வருவது பெரிய விடயமே.

மன்னாரிற்கு செல்வதற்கு நேரம் கிடைக்கவில்லை. இனிமேல் இவ்வாறானதொரு சந்தர்ப்பம் கிடைத்தால் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கும் சென்று கர்நாடக இசைக்கச்சேரியை நடத்துவேன்.

கேள்வி:- யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய பகுதிகளைந் சேர்ந்த இசைக் கலைஞர்களையோ அல்லது இசை ஆர்வலர்களையோ உங்களுக்கு சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்ததா? யுத்தத்திற்கு பின்னரான தற்போதைய காலகட்டத்தில் அவ் இசைக் கலைஞர்களின் அல்லது இசை ஆர்வலர்களின் மனநிலை எவ்வாறு காணப்படுகிறது?

பதில்:- ஆம்... சந்தித்தேன். அங்குள்ள இசைக் கலைஞர்களில் சிலரை எனக்கு ஏற்கெனவே தெரியும். அவர்களை நான் இந்தியாவிலும் சந்தித்ததுண்டு. அவர்கள் எனது வரவையிட்டு சந்தோஷமாக காணப்பட்டார்கள். தங்களது ஊருக்கு வந்து கச்சேரி நிகழ்த்துவதில் தங்களுக்கு மிக்க மகிழ்ச்சியென அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

யாழ்ப்பாணம் இசைத்துறைக்கு மிகவும் பெயர்போன இடமாகவுள்ள நிலையில், அங்குள்ள கலைத்துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள் பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் மாணவர்களுக்கு கலைத்துறைசார் பாடங்களை கற்பித்து வருகின்றனர். அங்குள்ள ஆசிரியர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

கேள்வி:- குறித்த பிரதேசங்களில் உங்களுக்குக் கிடைத்த வரவேற்பு பற்றி கூறுங்களேன்..?

பதில்: சிறந்த வரவேற்புக் கிடைத்தது. எனது வாழ்க்கையில் மறக்க முடியாதளவுக்கு கிளிநொச்சியில் வித்தியாசமானதொரு வரவேற்புக் கிடைத்தது.

கிளிநொச்சியில் எனது கச்சேரி நிறைவுபெற்றதும் பெரியவரொருவர் நேரில் வந்து என்னைச் சந்தித்தார். முப்பது வருடகாலத்தில் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்ற விடயமாக இந்த கர்நாடக இசைக்கச்சேரி அமைந்துள்ளதெனக் கூறி பாராட்டினார். வயதானவர்கள் தான் என் கச்சேரிக்கு வாருவார்களென நான் எண்ணியிருந்தபோது இளைஞர்களின் வருகை எனக்கு சந்தோஷமாக இருந்தது. 

ஒரு கலைஞனுக்கு நிறைய விருதுகள் கிடைக்கலாம். அல்லது கச்சேரி நடத்துவதன் மூலம் நிறையவே பணம் கிடைக்கலாம். ஆனால் இந்த மாதிரியாக பாராட்டு கிடைப்பதே கலைஞனொருவனுக்கு மிகப்பெரிய விடயமாகும். இதனை நான் ஒருபோதும் எனது வாழ்க்கையில் மறக்கமாட்டேன்.

கேள்வி:- யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மக்கள் உங்கள் இசையினால் திருப்தியடைந்தார்கள் என்று கருதுகிறீர்களா?


பதில்:- நிச்சயமாக... அவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் காணப்படுகின்றனர். இந்த நிலையில், அவர்களின் இசைத்துறையை வளர்ப்பதற்கு மேலும் என்ன செய்ய வேண்டுமென்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இசைத்துறையில் ஆர்வமுள்ள அவர்களை சிறந்த கலைஞர்களாக உருவாக்க வேண்டும். ஆதரவு கிடைத்தால் அவர்கள் இசைத்துறையில் தடம் பதிப்பார்கள்.

பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மாணவர்கள் எதிர்காலத்தில் கர்நாடக இசையைக் கற்றுக்கொள்வதற்காக என்னென்ன உதவிகள் வழங்க முடியுமோ அவற்றை உரியமுறையில் வழங்க வேண்டுமென்பதே எனது நிலைப்பாடாகும். 



கேள்வி:- இலங்கையின் தலைநகரமான கொழும்பிலும் உங்களது கர்நாடக இசைக்கச்சேரி நடைபெற்றது. அவ்வாறே  யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியாவிலும் உங்களது கர்நாடக இசைக்கச்சேரி நடைபெற்றது. இரண்டுக்குமிடையில் எப்படியாக வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

பதில்: பெரிதாக ஒன்றுமில்லை. கொழும்பில் நிறைய கச்சேரிகளை நிகழ்த்தியிருக்கின்றேன். கொழும்பில் கம்பன் கழகத்திலும் பல தடவைகள்; பாடியுள்ள அதேவேளை, நீலன் திருச்செல்வனின் நினைவுநாளை முன்னிட்டும் பாடியுள்ளேன். இராமகிருஷ்ணமிஷனில் நாளையதினம் (ஒக்டோபர் 7) பாடவுள்ளேன். கொழும்பிலும் வரவேற்பு பிரமாணமாகத்தான் இருந்தது, இருக்கும்.

இன்றைய சூழ்நிலையில் கொழும்பில் பாதுகாப்பானதொரு சூழ்நிலை காணப்படுகிறது. ஆனால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய பகுதிகளில் முப்பது வருடகாலமாக நிலவிய யுத்தம் முடிவடைந்த நிலையில் தற்போது வழமையானதொரு சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் எனது கச்சேரிக்கு வந்து ரசித்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். அது அந்த மக்களின்  நல்ல மனசைக் காட்டுகின்றது.

கேள்வி:- இன்றைய காலகட்டங்களில் மேலைத்தேய இசை வெகு வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்ற அதேவேளை, கர்நாடக இசையின் செல்வாக்கு சற்று குறைவடைந்தே செல்கின்றது. இந்த நிலையில் கர்நாடக இசையை நிலையாக தக்கவைத்துக்கொள்வதற்கு நீங்கள் என்ன உத்திகளை கையாண்டுள்ளீர்கள்?

பதில்:- கர்நாடக இசைக்கு செல்வாக்கு இருக்குமா, இளைஞர்கள் கர்நாடக இசையில் நாட்டம் செலுத்துவார்களா என்பது குறித்து இருபது வருடங்களுக்கு முன்னர் நான் எண்ணிப்பார்த்தது உண்டு. ஆனால் இன்று அவ்வாறில்லை. நிறைய இளைஞர்கள் கர்நாடக இசைத்துறையில் அதிக நாட்டம் செலுத்துகின்றனர். எனக்கு அடுத்த தலைமுறை - கர்நாடக இசையில் ஆர்வமாகவுள்ளதுடன், அதற்கடுத்த தலைமுறையும் கர்நாடக இசையில் ஆர்வமாகவுள்ளது. 

சினிமாப் பாடல்கள் கர்நாடக இசைத்துறையில் தாக்கம் செலுத்துகின்றதென நான் கூறமாட்டேன். சினிமாப் பாடல்களுக்கு வேறொரு வடிவம் காணப்படுகின்றது. எல்லா மக்களும் கர்நாடக இசையே கேட்க வேண்டுமென நாம் நினைப்பது மடமைத்தனம். அவ்வாறு எல்லோரும் கர்நாடக இசையை கேட்கப் போவதுமில்லை. கர்நாடக இசையை பத்துப் பேர் கேட்பார்களாகவிருந்தால் அதை பதினைந்தாக அதிகரிப்பது எனது கடமையென உணருகின்றேன்.

கர்நாடக இசைக்கச்சேரி நடத்துவது மாத்திரமன்றி, கர்நாடக இசையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளிலும் நான் ஈடுபட்டுள்ளேன். தமிழ் நாட்டில் கோவில்களில் இசைக்கலை, பரதக்கலை, நாட்டுப்புறப் பாடல்களை தழைத்தோங்க வேண்டுமென்பதற்காக நானும் எனது மனைவியுமாகச் சேர்ந்து கலாசார மறுமலர்ச்சி என்றதொரு அமைப்பை உருவாக்கி வைத்துள்ளோம்.

கோவில்களுக்கு அனைவரும் வருவார்களென்பதால் அங்கு கலையைக் கொண்டுவர முயற்சி செய்கின்றேன். அவர்கள் தெய்வங்களை தரிசிக்க வரும்பொழுது அவர்களின் காதுகளில் சங்கீதம் ஒலிக்குமானால் அவர்களில் ஒருசிலருக்கு சங்கீதத்தின் மீது ஆர்வம் ஏற்படும்.

மேலும் பின்தங்கிய பகுதிகளில் இசைத்துறையில் ஈடுபாடுள்ள மாணவர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களுக்கு சங்கீதம் கற்பதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளேன். கலைத்துறை மாணவர்களை வைத்து விழா நடத்தி வருகின்றேன். அடுத்த வாரமளவில் சென்னையிலும் புதுடில்லியிலும் இவ்விழாவை நடத்தவுள்ளேன். 



கேள்வி:- கர்நாடக இசைக்கச்சேரிக்கு பயன்படுத்தப்படும் பக்கவாத்தியங்கள் காலத்திற்குகாலம் மாற்றம் பெற்று வருகின்றன. இது கர்நாடக இசைக்கு ஆரோக்கியமானதா?

பதில்:- கர்நாடக இசைக்கச்சேரிக்கு பயன்படுத்தப்படும் பக்கவாத்தியங்களில் பெரியளவில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இருப்பினும் கீ போர்ட்டில் கர்நாடக இசையை வாசிக்கின்றனர். கீ போர்ட்டில் கர்நாடக இசையை வாசிப்பது நல்ல விடயம் அல்லவென்பது எனது கருத்து.

கேள்வி:- இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உங்களது கர்நாடக இசைக்கச்சேரி பணி தொடருமா?

பதில்:- நிச்சயமாக. மீண்டும் வரும் சந்தர்ப்பம் கிடைத்தால் வருவேன் நான். அவர்களுக்காக பாடுவேன் நான்.

நேர்காணல் : ஆர்.சுகந்தினி
படங்கள் : கித்சிரி டி. மெல்


You May Also Like

  Comments - 0

  • asker Friday, 07 October 2011 04:55 PM

    புலிகளால் கொழும்பில் பாதிக்கபட்ட மக்களுக்கு எப்ப கச்சேரி ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X