2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காலும் இல்லை கையும் இல்லை: கால்வாய் நீந்தி சாதனை!

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 20 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எமது உடலுக்கு வலிமை சேர்ப்பது கைகளும் கால்களும்தான். இவை இல்லாவிட்டால் எவரையும் 'முழு மனிதன்' என்று சொல்லிவிடமுடியாது. ஆனாலும் அவர்களுக்கும் மாற்றுத்திறண் இருக்கின்றதை அவ்வப்போது உலகுக்கு காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

பிரான்ஸ் நாட்டினை சேர்ந்த பிலிப்பே குரொய்ஷன் (வயது 42) கடந்த சனிக்கிழமை 18ஆம் திகதி ஆங்கில கால்வாயினை நீந்தி சாதனை படைத்திருக்கிறார். இவருக்கு இரண்டு கால்களும் இரண்டு கைகளும் இல்லை.

1994ஆம் ஆண்டு 20000 வோல்டேஜ் மின்சாரம் உடலை தாக்கியதால் தனது கால்களையும் கைகளையும் இழந்தார் பிலிப்பே குரொய்ஷன். திருமணமாகி ஓர் ஆண் குழந்தைக்கும் தந்தையாகிய இவர் ஒரு மின்சார தொழிலாளி. தனது 26ஆவது வயதில் (1994ஆம் ஆண்டு) தொலைக்காட்சி அன்டனாவை சரிசெய்து கொண்டிருந்த வேளையில் அதிசக்திவாய்ந்த மின்சார கம்பியில் அன்டனா வீழ்ந்ததால் தூக்கிவீசப்பட்ட பிலிப்பே குரொய்ஷன், 20 நிமிடங்களின் பின்னர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இடது கையினை முழங்கைக்கு மேலாகவும் வலது கையினை முழக்கைக்கு கீழாகவும், வலது காலினை முழங்காலுக்கு மேலாகவும் அகற்றினர். இடதுகால் அகற்றத்தேவையில்லை என்றிருந்த நிலையில் அக்கால் இயங்காததால் அதனையும் அகற்றவேண்டி ஏற்பட்டது. தனது 26ஆவது வயதிலேயே கை, கால்களை இழக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டார் குரொய்ஷன்.

தனது வாழ்வினை தொலைத்து மருத்துவமனையில் இருந்தவேளையில், தொலைக்காட்சியில் ஒரு பெண் ஆங்கிலக் கால்வாயினை நீந்தியது பற்றிய ஆவணப்படமொன்றை பார்த்திருக்கிறார். அதன்மூலம் நம்பிக்கை பிறந்த குரொய்ஷன் புத்துணர்ச்சிபெறத் தொடங்கினார். முழமையாக குணமடைந்த பின்னர் ‘நான் வாழ்வதற்கு முடிவு செய்தேன்’ என்ற ஒரு புத்தகத்தினையும் வெளியிட்டிருக்கிறார். அப்பொழுதிருந்தே ஆங்கில கால்வாயினை நீந்திக் கடப்பதை தனது இலட்சியமாகக் கொண்டு செயற்படத் தொடங்கினார். அதற்கான பயிற்சிகளையும் தவறாமல் பெற்றுக்கொண்டார்.

கடந்த சனிக்கிழமை ஆங்கில கால்வாயினை நீந்தி கடந்து, சாதனை படைப்பதற்காக கடந்த இரண்டு வருடங்களாக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறார் பிலிப்பே குரொய்ஷன். ஒவ்வொருநாளும் குறைந்தது 5 மணித்தியாலங்கள் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்த விஷேட பயிற்சிக்காக தனது காலில் புதியதொரு ஆணியினையும் பொருத்திக்கொண்டார். இதற்காக சுமார் 30 லட்சங்களை செலவு செய்திருக்கிறார்.

முழுமையாக பயிற்சிபெற்ற பிலிப்பே குரொய்ஷன் கடந்த சனிக்கிழமை காலை 6.45 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) தனது கனவினை நிஜமாக்கும் நோக்குடன் ஆங்கில கால்வாயினை நீந்தத் தொடங்கினார். சுமார் 34 கிலோமீற்றர்கள் நீளமான ஆங்கில கால்வாயினை மாலை 8.13 மணியளவில் நீந்தி முடித்ததன் மூலம் வரலாற்று சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் ஆங்கில கால்வாயினை கடந்த கை, கால்களை இழந்த முதல் மனிதர் என்ற சாதனையையும் தனதாக்கிக் கொண்டார் குரொய்ஷன்.

நம்பிக்கையோடு செயற்பட்டால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு 42வயதுடைய பிலிப்பே குரொய்ஷன் நல்லதொரு எடுத்துக்காட்டு.


You May Also Like

  Comments - 0

  • xxx Saturday, 05 February 2011 11:00 PM

    இதுதான் சாதனை

    Reply : 0       0

    mohamed niays from Qatar Thursday, 31 March 2011 09:59 PM

    நம்பிக்கைதான் வாழ்க்கை....!

    Reply : 0       0

    kamber Saturday, 09 June 2012 07:47 AM

    நம்பிக்கை மட்டுமல்ல கடின உழைப்பும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .