2024 மார்ச் 28, வியாழக்கிழமை

'ஆறுமுகனின் பயணத்தால் காங்கிரஸ் காணாமல்போய்விடும்'

Editorial   / 2019 நவம்பர் 07 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

“சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுத்துவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இம்முறை பட்டப்பகலிலேயே படு குழிக்குள் விழும் வகையில் அரசியல் தீர்மானம் எடுத்துள்ளது. இதே வழியில் ஆறுமுகன் தொண்டமான் பயணிப்பாராயின் இன்னும் சில வருடங்களில் காங்கிரஸ் காணாமல்போய்விடும்.” என்று, கண்டி மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

“தமிழ் மக்களால் துரோகிகளாக பார்க்கப்படுகின்ற கருணா, பிள்ளையான் போன்றோர் அங்கம் வகிக்கும் அணியில் ஆறுமுகன் தொண்டமானும் இணைந்துள்ளதால் அவரின் கட்சி சகாக்களே கடும் அதிருப்தியில் உள்ளனர்.  எனவே, ஜனாதிபதி தேர்தல் குறித்து தான் எடுத்துள்ள முடிவை - சமூகத்தின் நலன்கருதி அவர் மீள்பரிசீலனை செய்யவேண்டும்.” எனவும் வேலுகுமார் எம்.பி. வேண்டுகோள் விடுத்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு திரட்டி கண்டி மாவட்டத்தில் பல இடங்களிலும் இன்று (07) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

“மகாத்மா காந்தி, நேரு போன்ற பாரத தேசத்தின் தலைவர்களின் பங்களிப்புடனேயே மலையக மக்களுக்காக 1939 ஆம் ஆண்டில் இலங்கை, இந்திய காங்கிரஸ் உதயமானது.

“மலையக சமூகத்தின் விடிவுக்காக குரல் எழுப்பிய பல தலைவர்களும் அதில் அங்கம் வகித்தனர். 1948 இல் இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், காலப்போக்கில் இலங்கை, இந்திய காங்கிரஸை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக மாற்றினர்.

“தனிநபரின் ஆதிக்கத்தால் முக்கியமான தலைவர்கள் காங்கிரஸிலிருந்து வெளியேறினர். அதுமட்டுமல்ல தனிநபருக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலேயே தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. இலங்கை, இந்திய காங்கிரஸ் எதற்காக உருவாக்கப்பட்டதோ அதன் நோக்கமும் குழிதோண்டி புதைக்கப்பட்டது.

“இவ்வாறு அன்றிலிருந்து இன்றுவரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொள்கை அரசியலை புறந்தள்ளிவிட்டு, சந்தர்ப்பவாத அரசியலுக்கே முன்னுரிமை வழங்கிவருகின்றது. அந்தகாலத்தில் மக்கள் மத்தியில் அரசியல் ஞானம் இருக்கவில்லை. இதனால், இலகுவில் மாற்றப்பட்டனர்.

“ஆனால், இன்று நிலைமை அவ்வாறு அல்ல. மலையக மக்களை ஏமாற்றிய காலம் மலையேறிவிட்டது. எமது இளைஞர்கள் சிறந்த அரசியல் ஞானத்துடன் இருக்கின்றனர். வரலாற்றில் இழைக்கப்பட்ட தவறுகளை, துரோகங்களை அடையாளங்கண்டு, அவற்றை சமூகமயப்படுத்தி வருகின்றனர்.

“எனவே, எங்கள் தாத்தா அதை செய்தார், இதை செய்தார் என கூறிக்கொண்டு, மக்கள் கோரிக்கையை புறந்தள்ளி, இனியும் சந்தர்ப்பாத அரசியலை ஆறுமுகன் தொண்டமான் முன்னெடுப்பாரானால், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிச்சயம் காணாமல்போய்விடும். சிறப்பான தலைமைத்துவம் இன்மையால் சுதந்திரக்கட்சிக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைமையை சிறந்த படிப்பினையாக அக்கட்சி காரர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

“அதேவேளை, அமரர். சௌமியமூர்த்தி தொண்டமான் தனிநபர் ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்பட்டாலும், முக்கியமான கட்டங்களில் மக்கள் பக்கம்நின்றே தீர்மானம் எடுத்துள்ளார். 1977 களில் உருவான தமிழர் கூட்டணியிலும் அவர் இணை தலைமை பதவியை வகித்துள்ளார். ஒருபோதும் தமிழ் இன துரோகிகளை அவர் ஆதரித்தில்லை என்றே அவரின் விசுவாசிகள் இன்றும் கூறுகின்றனர்.

“ஆனால் தாத்தா செய்யாத அந்த காரியத்தை இன்று பேரன் செய்துள்ளார். தமிழ் இன துரோகிகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைந்துள்ளார். வழமையாக தவறான அரசியல் முடிவுகளால் இரவில் வெட்டப்படும் குழிக்குள் விழும் ஆறுமுகன் தொண்டமான், இம்முறை பட்டப்பகலிலேயே குழிக்குள் விழுந்துள்ளார். அந்த குழிக்குள் இருந்து மீள வேண்டுமானால் தான் எடுத்துள்ள முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.” என்றார் வேலுகுமார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X